×

உடலின் கெஞ்சல்களை புறக்கணிக்காதீர்கள்!

நன்றி குங்குமம் தோழி

வரும் முன் காப்பது நலம். இது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் வாழ்க்கையில் பல நஷ்டங்களை தவிர்க்கலாம். பல தருணங்களில் நமக்குத் தோன்றும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று. அதே போல் சில தருணங்களில் நமக்கு யாராவது எச்சரிக்கை செய்தால் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் என்றும் நாம் நினைப்பதுண்டு. உடல் நல ரீதியான எச்சரிக்கைகளை அவ்வப்போது அது வெளிப்படுத்ததான் செய்கிறது. நாம்தான் அவற்றை கண்டுகொள்வதில்லை. உடல் சொல்லும் அறிவிப்புகளை புரிந்து கொள்வது அவசியம். இந்த அறிகுறிகளை புறக்கணித்தால் அதற்கான விலை கொடுக்க நேரிடும்!

அடிக்கடி கொட்டாவி வருகிறதா?

கொட்டாவி சோம்பல் அல்லது போதுமான தூக்கம் இல்லாததால் வருவதல்ல. உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் கொட்டாவி வருகிறது. போதுமான ஆக்சிஜன் கிடைக்க ஆழமாக சுவாசிக்க வேண்டும். அறைக் கதவு, ஜன்னல்கள் மூடியிருந்தால் திறந்து வையுங்கள். வெளியே சற்று நேரம் காற்றாட நடந்தும் வரலாம்.

வாயில் துர்நாற்றம் வருகிறதா?

குடல் பிரச்னை காரணமாக வாயில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உணவுப் பழக்கத்தை முறைப்படுத்துங்கள்.

காதில் நடு நடுவே இரைச்சல் கேட்கிறதா?

உயர் ரத்த அழுத்தம் உடலில் ஏற்பட்டால் எச்சரிக்கை அடைந்து உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதிக்கச் சொல்லி அறிவுரை பெறுங்கள்.

நாக்கில் எரிச்சல் உள்ளதா?

உடலில் வைட்டமின் பி குறைபாடு இருக்கிறது என்பதைச் சொல்லும் அறிகுறி இது. பச்சைக் காய்கறிகள், முட்டை சாப்பிடுங்கள்.

திடீரென தலை சுற்றுகிறதா?

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது. சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருக்காதீர்கள்.

இனிப்பு சாப்பிட ஆசையாக இருக்கிறதா?

உடலில் மெக்னீசியம் குறைபாடு இருந்தால் இனிப்பு சாப்பிடத் தோன்றும். உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, பூசணி, வெள்ளரி விதைகள் சாப்பிடுங்கள்.கால்கள், பாதம் அடிக்கடி வீங்குகிறதா?இதயம் அல்லது சிறுநீரக பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

மூக்கிற்கு வாசனையை இனம் காணத் தெரியவில்லையா?

உடலில் துத்தநாகச் சத்து(Zinc) குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். பூசணி விதை, கடல் உணவுகள் சாப்பிடுவது உடலில் துத்தநாகச் சத்தினைக் கூட்டும்.

எப்போதும் சோர்வாக இருக்கிறீர்களா?

வைட்டமின் டி குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். காலை வெயிலில் 20 நிமிடம் சில நாட்கள் நின்றால் வைட்டமின் டி இயற்கையாகவே கிடைத்துவிடும்.

அடிக்கடி தலைவலி வருகிறதா?

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தலைவலி வரலாம். தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்க வேண்டும்.

முடி அதிகமாக உதிர்கிறதா?

இரும்புச்சத்து குறைபாடு இருக்கும். கீரை, பேரீச்சம்பழம், மாதுளை சாப்பிடுங்கள்.

இரவில் கெண்டைக்கால் தசை முறுக்கிக் கொள்கிறதா..?

மெக்னீசியம் குறைபாடு இதற்குக் காரணம். கீரை, காய்கறிகள், வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

கண்கள் மஞ்சளாக இருக்கிறதா?

இது கல்லீரல் பிரச்னையின் தெளிவான அறிகுறி. மஞ்சள் காமாலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

கைகள், கால்கள் மரத்துப் போகிறதா?

வைட்டமின் B12 குறைபாடு. பால், முட்டை, மீன் சாப்பிடுங்கள். சைவ உணவு சாப்பிடுபவர்கள் B12 மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

கைகள், கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறதா?

ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யுங்கள், இரும்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

ஈறுகளில் ரத்தம் வந்தால்?

உடலில் வைட்டமின் C குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.மேலே சொல்லப்பட்ட அறிகுறிகள் எல்லாம், ‘என்னைக் கொஞ்சம் கவனியுங்கள்’ என்று சொல்லும் உடலின் கெஞ்சல்கள். அவற்றை புறக்கணிக்கக் கூடாது. அறிகுறி தென்பட்டதும், சுய மருத்துவம் செய்யாதீர்கள். மருத்துவரைச் சந்தியுங்கள். சரியான உணவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடியுங்கள். தினமும் எட்டு மணி நேரம் சரியாகத் தூங்குங்கள். காலை இளம் வெயிலில் நடக்க வேண்டும்.

நினைவில் வையுங்கள்…

‘‘உடல் நலம் இருந்தால் – எல்லாமே இருக்கும்.
உடல் நலம் இல்லாவிட்டால், எதுவுமே இல்லை!”
உடலை நேசியுங்கள்… உடலை பராமரியுங்கள்… உடலை கெஞ்ச வைக்காதீர்கள்..!

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

 

Tags :
× RELATED சருமப் பாதுகாப்புக்கு சன்ஸ்க்ரீன் அவசியமா?