×

இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

உன் தங்க நிறத்துக்குத்தான்…

கோடைக்காலத்திற்கென இயற்கை நமக்களித்துள்ள நீர்ப்பழங்களில் தங்க நிற முலாம் பழம் எனப்படும் கிர்ணிப்பழம் முக்கியமானது. வீதியெங்கும் குவிந்த நிலையில், மக்களுக்கு தெரிந்த இப்பழத்தின் தெரியாத தகவல்களை இயற்கை-360° பயணத்தில் அறிந்துகொள்வோம் வாருங்கள்!

அழகிய மஞ்சள் நிறமும், நாசியைத் துளைக்கும் மண் மணமும் கொண்ட முலாம் பழத்தின் தாவரப்பெயர் Cucumis melo. வெள்ளரிக் குடும்பத்தைச் சார்ந்த படரும் வகைத் தாவரமான இது
தோன்றிய இடம் ஈரான், பெர்ஷியா மற்றும் இந்தியா.‘Musk’ என்றால் பெர்சிய மொழியில் ‘வாசனை’ (perfume). ‘Melon’ என்பது ஃப்ரெஞ்சு மொழியில் ஆப்பிள். ஆப்பிளைப் போன்ற மெலன் என்பதால் ‘Melopepo’ என்றும், பிரத்யேக மணம் காரணமாக, ‘Musk Melon’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது Cantaloupe, Santa Claus, Rock Melon, Spanspek, Sweet melon என ஆங்கிலத்திலும், கர்பூஜா, கர்பூஸ், மதுபலா, சக்கரத்தேலி, சிப்புடூ, காக்கரி, காக்கடி, சிப்பாட், தும்மட்டிக்காய் என பிற மாநிலத்தவரால் அழைக்கப்படுகிறது.

சற்றே தடிமனான தோல் பகுதிக்குள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் வண்ண சதைப்பகுதி நல்ல சுவையோடு இனிப்பாகவும், சாறு நிறைந்து மிருதுவாகவும் காணப்படும். இதன் மையப்பகுதி, வெள்ளை நிற விதைகளுடன் தென்படும். பெரும்பாலும் இதன் சதைப் பகுதியே உட்கொள்ளப்படுகிறது என்பதால், நீர் தன்மையும், பொட்டாசியமும் நிரம்பிய முலாம் பழத்தை நீர் வறட்சிக்கான முக்கிய கோடைப்பழமாக A glass of water with electrolytes in fruit form என உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அதிக நீர்த்தன்மை, குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து, அதிக கரோட்டினாய்டுகள் மற்றும் Zero கொழுப்பு போன்றவை முலாம் பழத்தின் தனிச்சிறப்புகள். மேலும், வைட்டமின்கள் A, C, B, E, K மற்றும் தையமின், நியாசின், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட B வைட்டமின்களும், பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், செலீனியம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமச் சேர்மங்களும் நமது தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றோடு, ஃபெரூலிக் அமிலம், எலாஜிக் அமிலம், கேஃபீக் அமிலம் போன்றவை முலாம் பழத்திற்குத் தனி மணத்தை வழங்குவதால், இதிலுள்ள லூட்டீன், ஜியா-ஸாந்தின், லைக்கோபீன் தாவரச்சத்துகள், இதன் மருத்துவ குணங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.

தாகத்தைப் போக்குவதுடன், உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை அளிக்கிறது. நோயெதிர்ப்புத் திறன் மற்றும் ஞாபகத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. கண் மற்றும் சருமப் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது. இதிலுள்ள அடினோசின் ரத்தக்குழாய் அடைப்பை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் நோய்களிலிருந்தும் காக்கிறது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன், மலச்சிக்கல் ஆகியவற்றின் தீவிரத்தைக் குறைக்க உதவுவதுடன், புற்றுநோய் சிகிச்சைகளின் தாக்கத்தைக் குறைக்கின்றது. முலாம் பழத்தின் கரோட்டினாய்டுகள் சிகரெட்டுகளிலுள்ள ‘Benzapyrene’ என்ற நச்சுத்தன்மையை போக்குகின்றன. புகைப்பழக்கத்தைக் கைவிடவும் உதவுகின்றன.தர்பூசணிப் பழ விதைகள் போன்றே முலாம் பழ விதைகளும் மருத்துவ குணம் நிறைந்தவை எனும் இயற்கை மருத்துவர்கள், வயிற்றுப்போக்கு, குடல் அழற்சிக்கு இவை பயனளிக்கின்றன என்கின்றனர். இதன் விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் உணவாகவும், சருமப் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகிறது.

சற்றே கனமாக, தட்டும்போது ஆழமான ஒலியுடன், முகரும்போது காம்புகளில் மணமும் கொண்ட பழங்களே தரமானவை என்றாலும், மற்ற பழங்களைப் போல, ஒவ்வாமை மற்றும் அழற்சி இதிலும் காணப்படுகிறது. எளிதில் அழுகும் தன்மை கொண்டதால், உடனடியாக அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்த ஒருநாளுக்குள் பயன்படுத்த ஊட்டவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

விதைகள் மூலம் எளிதில் விளையும் தாவரமான முலாம் பழத்திற்கான சீசன், ஏப்ரல் முதல் ஜூலை வரை. சீனா இதனை உலகளவில் பெருமளவு உற்பத்தி செய்கிறது. நமது நாட்டில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழகம் அதிகமாக விளைவிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள முலாம் பழம், பண்டைய எகிப்திய ஓவியங்களில் இடம்பெற்றுள்ளதுடன், கிரேக்க மற்றும் ரோமானியர்களின் பிடித்த உணவாகவும், இஸ்லாமியர்களின் நோன்பிற்கு பிறகான உணவாகவும் இருந்திருக்கிறது. முகலாய மன்னர் பாபரின் விருந்து உபசாரத்தில் முக்கிய உணவாகவும் இது இடம்பிடித்துள்ளது.

கொலம்பஸ் தன் பயணத்தில் கொண்டு சேர்த்த தாவரங்களில் முலாம் பழமும் ஒன்று.தண்ணீரில் நன்றாக கழுவிய பிறகு, தோல் நீக்கி, துண்டுகளிட்டு இந்தப் பழத்தை உட்கொள்ளலாம். அல்லது ஜூஸாகவும், ஸ்குவாஷ், ஜாம், ஃபுட்டிங், ஐஸ்கிரீம், சாஸ் ஆகியவையாக தயாரித்தும் உண்ணலாம். சாட் மசாலா அல்லது சர்க்கரை தூவிய பழங்கள் நம்மிடையே பிரபலம் அடைந்ததுபோல், ‘Midori’ என அழைக்கப்படும் முலாம்பழ மதுபானம் ஜப்பானில் மிகவும் பிரபலம்.

“பெண்களைப் போலவே முலாம் பழங்களும் இனிக்கவும், சில சமயம் தள்ளி நிற்கவும் செய்கின்றன” எனும் கவிஞர்கள், முலாம் பழத்தை பெண்ணோடு இணைத்து உவமைப்படுத்துகின்றனர். முலாம் பழத்தின் தகதகக்கும் தங்க நிறத்திற்கும், இதன் தங்கமான குணத்திற்கும் மரியாதை கொடுக்கும் விதமாய், இந்த கோடைக்காலத்தை முலாம் பழத்துடன் கழிப்போம்..! கோடையை கழித்து இன்புறுவோம்.!!

(இயற்கை பயணம் நீளும்…)

 

Tags : Nature 360° ,Kumkum ,Nature-360° ,
× RELATED தர்ஷக் கெளடா ஃபிட்னெஸ்!