வாஷிங்டன்: ஈரானுடனான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் டிரம்ப் மீண்டும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளர். இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் அணு உலைகளை அழிப்பது. அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தளங்களை முடக்குவது, ஹார்முஸ் ஜலசந்தி’ கடல்வழியை முடக்கியதால், அதைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது உள்ளிட்டவற்றை மையமாக வைத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. தற்போது, இந்த போர், கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றன. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம். அதற்கு முன்பாக, அந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வேண்டும். தவறினால் அமெரிக்கா புதிய தாக்குதல்களை தொடுக்கக்கூடும். கட்டாயமாக ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும். ஈரான் விவகாரத்தில் நாம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலைமை முடிவடையலாம் அல்லது மேலும் மோசமடையலாம். நாங்கள் சற்று விரும்பத்தகாத சில காரியங்களை செய்வோம், ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறேன். நாம் சென்று இதை முடித்து வைக்க போகிறோமா அல்லது அவர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட போகிறார்களா என்பதுதான் ஒரே கேள்வி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இந்த விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்’ என்றார்.
இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா அனுப்பியுள்ள சமீபத்திய புதிய அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை ஈரான் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது மோதலை விரிவுபடுத்தி, பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தும் தலைமை அதிகாரியான முகமது பாகர் காலிபாப் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ எந்த ஒரு சூழ்நிலையிலும் ஈரான் யாருடைய மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதலைத் தொடங்கினால், அதற்கு மிக உக்கிரமான முறையில் பதிலடி கொடுக்க ஈரானிய படைகள் முழு தயார் நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் எந்த நேரத்திலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
