×

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு: 4 பெண்களுக்கு இடம்: 19 மாவட்டங்கள் புறக்கணிப்பு

 

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதே நேரம் 19 மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.

தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க மேலும் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐஎம்யூஎல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களை ஆளுநர் முன் நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ம் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. எனினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், ேபாக்குவரத்து, உயர்கல்வி, சுற்றுலா, வணிகவரித்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இதனால், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதித்தது.

இந்த நிலையில், தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரை நேற்று காலை 10 மணிக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணைய உள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக நேற்று காலை 9 மணிக்கு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக்காப்பு தீர்மானம் நிறைவேற்றி வைத்தார்.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் முதலில் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முன்னதாக கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்வர் விஜய் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். ஆளுநரும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் ரமேஷ் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.விஸ்வநாதன், எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தவெக ஆதரவு கட்சி தலைவர்களான திருமாவளவன் (விசிக), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), வீரபாண்டியன் (இந்திய கம்யூ.) ஆகியோரும் வருகை தந்தனர். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்.

புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி) 2. எஸ்.கமலி (அவினாசி) 3. சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்) 4. ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்) 5. வினோத் (கும்பகோணம்) 6. ராஜீவ் (திருவாடானை) 7. பி.ராஜ்குமார் (கடலூர்) 8. வி.காந்திராஜ் (அரக்கோணம்) 9. பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்) 10. கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) 11. எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்) 12. எம்.விஜய் பாலாஜி (ஈரோடு) 13. டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்) 14. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) 15. ரமேஷ் (ஸ்ரீரங்கம்) 16. பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்) 17. ஆர்.குமார் (வேளச்சேரி) 18. கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) 19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு) 20. ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி) 21. டி.சரத்குமார் (தாம்பரம்) 22. என்.மரியவில்சன் (ஆர்.கே.நகர்) 23. கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு) ஆகிய 23 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பதற்கு முன் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, சத்யவாணி முத்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது. 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 3 பெண்கள் அமைச்சராக இருந்தனர். கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் பூங்கோதை, கீதாஜீவன், கயல்விழி, தமிழரசி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தற்போது, தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்டுள்ள 23 பெயர்கள் கொண்ட அமைச்சரவை பட்டியலில் 3 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.கமலி (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரப்பாளையம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் தற்போது 19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒரு பதவி கூட வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், வழக்கமாக ஒவ்வொரு ஆட்சியிலும் மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படுவது வழக்கம். இப்படி, அமைச்சர் பதவி வழங்கினால்தான் அந்த மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசில் 19 மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவிகூட வழங்கப்படவில்லை.

குறிப்பாக நெல்லை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திரவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தர்மபுரி, கரூர் கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

தலைநகர் சென்னையில் மட்டும் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 14 பேர் வெற்றி பெற்றனர். அதில், 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தவெக வெற்றி பெறாத கன்னியாகுமரிக்கு மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), விஸ்வநாதன் (மேலூர்) ஆகியோர் அமைச்ச்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி, காலை 11.15 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, ஆளுநர் அர்லேகருடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

* தமிழ்த்தாய் பாடல் மீண்டும் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது

தமிழகத்தில் நடைபெறும் அரசு விழா தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கும். விழா முடிவடையும்போது தேசியகீதம் பாடப்படும். இதுதான் காலகாலமாக மரபாக பின்பற்றப்பட்டது. ஆனால், விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தேமாதரம், அடுத்து தேசிய கீதம், 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதுபற்றி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தபோது, இனி நடைபெறும் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், 2வது முறையாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சியாக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது நேற்றும், முதலில் வந்தேமாதரம், அடுத்து தேசிய கீதம், 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* அமைச்சர்களில் 31 பேர் முதல்முறையாக வெற்றி

தமிழக அமைச்சரவையில் முதல்வர் விஜய்யுடன் சேர்த்து தற்போது 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 31 அமைச்சர்கள் தவெகவை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 33 அமைச்சர்களில் செங்கோட்டையன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் தவிர விஜய் உள்ளிட்ட 31 அமைச்சர்களும் முதல் முறையாக சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர்களாக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 7 பேர் பட்டியலினத்தவர்கள் தேவேந்திரர், நாடார் புறக்கணிப்பு

தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சராவையில் ஏற்கனவே அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனா விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர். தேர்தலுக்கு முன்பும் கூட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நல்ல நட்புனர்வுடன் தான் இருந்தார். இதனால் தவெக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை விஜய் ஆதவ் அர்ஜுனா மூலம் தான் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்தாலும், அவர் உடல் மூச்சு அனைத்தும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியாகவே இன்று வரை செயல்பட்டு வருகிறார். அவரது அறிவுறுத்தலின் படியே தற்போது தவெக தலைவரும் முதலமைச்சரான விஜய், பட்டியலினத்தவர்களுக்கு தனது அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் யார் யார் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கீழ் நிலையில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் எனது கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் சென்னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏவான ராஜ்மோகன், அவிநாசி தொகுதி எம்எல்ஏ கமலி, அரக்கோணம் காந்திராஜ், ஒட்டப்பிடாரம் மதன்ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு, மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகனான ராசிபுரம் தொகுதி எம்எல்ஏ லோகேஷ் தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஆதவ் அர்ஜுனா பரிந்துரைப்படி ராஜ்மோகன், தென்னரசு, காந்திராஜ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் என 4 பேர் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். லோகேஷ் தமிழ்செல்வன், கமலி ஆகியோர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒட்டப்பிடாரம் மதன்ராஜா தேவேந்திர குல வேளாளர் இனத்தை சேர்ந்தவர். வட மாவட்டங்களில் அதிகமாக உள்ள ஆதிதிராவிடர்களுக்கு 4, மேற்கு மாவட்டத்தில் உள்ள அருந்ததியர்களுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து மத்திய மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கோவை வரை அடர்த்தியாக பரவியுள்ள தேவேந்திரர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அச்சமூக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தான் சார்ந்த விசிகவினருக்கு முக்கியத்துவம் அளிக்கவே இப்படி அவர் செயல்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்), கே.ஜெகதீஸ்வரி (தவெக, ராஜபாளையம்) ஆகிய 2 பேருக்கு மட்டுமே நாடார் சமூகத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடார் சமூகத்துக்கு 2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்கியுள்ளது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

* சென்னை மாவட்டத்துக்கு 7 அமைச்சர்கள்

தமிழக அமைச்சரவையில் முன்பு எப்போது இல்லாத வகையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக கோட்டையான சென்னை மாவட்டத்தில் துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை தவிர மற்ற 14 தொகுதிகளை தவெக வெற்றி பெற்றது. இதையடுத்து பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் முதல்வராகவும், தி.நகர், வில்லிவாக்கம், எழும்பூர், வேளச்சேரி, ஆர்.கே.நகர், மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற 7 பேர் அமைச்சர்களாக பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 3 பேர் அமைச்சர்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 அமைச்சர்களாவும், ஈரோடு மாவட்டத்தில் 2 பேர் அமைச்சர்களாகவும், கோவை மாவட்டத்தில் 2 பேர் அமைச்சர்களாகவும், மதுரை மாவட்டத்தில் 2 பேர் அமைச்சர்களாகவும், விருதுநகரில் 2 பேர் அமைச்சர்களாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேர் அமைச்சர்களாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர், சேலம் மாவட்டத்தில் ஒருவர், திருப்பூர் மாவட்டத்தில் ஒருவரும்,

திருச்சி மாவட்டத்தில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தில் ஒருவரும், தஞ்சை மாவட்டத்தில் ஒருவரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவரும், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு என மொத்தம் 19 மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் தமிழக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்து. மீதமுள்ள 19 மாவட்டங்களில் வெற்றி பெற்ற யாருக்கும் தமிழக அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

* பிராமணர்கள் 2 பேருக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மிக முக்கியப் பாரம்பரியப் பின்னணி கொண்ட இந்து சமய அறநிலையத்துறை, ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏவான ஐயர் பிரிவை சேர்ந்த ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில்களை அறநிலையத்துறையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே, இப்போது அதே அறநிலையத்துறையின் அமைச்சராக அமர்ந்துள்ளார். மயிலாப்பூர் எம்எல்ஏ வெங்கடரமணன் உணவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் அய்யங்கார் வகுப்பு சேர்ந்தவர்.

* வீடு புகுந்து ரவுடிசம் செய்தவர் நிதி அமைச்சர்

முதலமைச்சர் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற போது, மிக முக்கிய துறையான நிதித்துறை செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவர் நிதித்துறையிலிருந்து மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்தை தொடர்ந்து, செங்கோட்டையனுக்குப் பதிலாக தவெக முக்கிய நிர்வாகியான மரிய வில்சன் புதிய நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிக முக்கியமான நிதித்துறை செங்கோட்டையனிடமிருந்து பறிக்கப்பட்டு, வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* 28 வயது பெண் அமைச்சர்

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்த அவிநாசி (தனி) தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர். மிகவும் எளிமையான பின்னணி கொண்ட கமலி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை பலரும் பாராட்டுகிறார்கள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் தான் 28 வயதான கமலி. நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கல்வியில் கல்லூரியில் பி.எட் படித்தவர்.

ராசிபுரம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்தவர். திருமணமானவர் ஆவார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரின் கணவர் அந்த பகுதியில் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். கமலி குடும்பம் எளிமையான குடும்பத்தினர் ஆவர். குடும்பத்தில் இருந்து யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதே கிடையாது. முதல்முறையாக அரசியலுக்கு நுழைந்த கமலிக்கு முதல்வர் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

Tags : Tamil Nadu Cabinet ,Chennai ,Tamil Nadu ,Vijay ,Tamil Nadu… ,
× RELATED தவெக அமைச்சரவையில் விசிக இணைவதால்...