சென்னை: இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியும், சி.என்.ஜி எரிவாயு கிலோ ரூ.2 உயர்த்தியும் எண்ணெய் வணிக நிறுவனங்கள் அறிவித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கை மீது மோடி அரசு தொடுத்துள்ள கொடூரமான தாக்குதல் ஆகும். இத்தகைய தாக்குதலை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன. ஏற்கனவே வணிக சிலிண்டர்கள் விலை உயர்வால், ஆயிரக்கணக்கான உணவகங்கள் இழுத்து மூடப்படும் நிலையை அது உருவாக்கியது.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல இத்தகைய தாக்குதல் வரப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பை பிரதமர் மோடி ஒரு சில நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு விட்டார். பொதுப் போக்குவரத்தில் பயணியுங்கள், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் என்றெல்லாம் அறிவுரைகளை பொழிந்தார். ஆகவே, இந்த விலை உயர்வு எண்ணெய் வணிக நிறுவனங்களின் சுயேச்சையான முடிவு அல்ல. ஒன்றிய பாஜ அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பே ஆகும்.
போர் ஒருபுறம் உலக மக்களின் நிம்மதியை அலைக்கழிக்கிறது எனில், அரசு தொடுக்கிற பொருளாதார போராக உள்நாட்டிலும் மக்களின் அமைதியை, நிம்மதியை இத்தகைய விலை உயர்வுகள் சீரழிக்கின்றன. பெட்ரோலியப் பொருட்கள் அத்தியாவசியமானது என்ற முறையில் மானியம் வழங்கி இத்தகைய விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
