×

100 ஆண்டுகள் சேவையில் பஜாஜ்: சுதந்திரப் போராட்டம் முதல் உலகளாவிய வளர்ச்சி வரை: 100 ஆண்டுகள் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!

* US$ 148 பில்லியன் சந்தை மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் குழுமம், ஆட்டோமொபைல், நிதி சேவைகள், நுகர்வோருக்கான மின் சாதனங்கள் மற்றும் மின் பொறியியல் ஆகிய துறைகளில் செயல்பாடுகளுடன் 3-ல் 1 இந்திய குடும்பத்திற்கு சேவையாற்றி வருகிறது.

* நூற்றாண்டு கால நம்பிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, கொடையாளர், தொழிலதிபர் மற்றும் மகாத்மா காந்தியின் ஐந்தாவது தத்துப்பிள்ளையாகக் கருதப்படும் ஜம்னாலால் பஜாஜ்-ஆல் நிறுவப்பட்ட பஜாஜ் குழுமம் தனது பயணத்தை தொடங்கியது. இவர், 1926 ஆம் ஆண்டில் மும்பையில் இக்குழுமத்தின் முதல் அலுவலகத்தை நிறுவினார்.

மும்பை, மே 12, 2026: இந்தியாவின் மிக தொன்மையான குடும்ப தொழில் நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் $USD 148 பில்லியன் சந்தை மதிப்புடன் மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழும் பஜாஜ் குழுமம், வணிக-தொழில்துறையில் தனது 100 ஆண்டு கால செயல்பாட்டை இன்று நினைவுகூர்ந்து கொண்டாடியது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வரையிலான பயணத்தை பிரதிபலிக்கும் இந்த மைல்கல் நிகழ்வையொட்டி மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

1926 ஆம் ஆண்டில் மும்பையில் சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, கொடையாளர், தொழிலதிபர் மற்றும் மகாத்மா காந்தியின் ஐந்தாவது தத்துப்பிள்ளையாகக் கருதப்படும் ஜம்னாலால் பஜாஜ் என்பவரால் நிறுவப்பட்ட பஜாஜ் குழுமம், 130,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மூன்று இந்திய குடும்பங்களில் ஒன்றுக்கு தனது தயாரிப்புகள் வழியாக சேவை வழங்கி வருகிறது;

100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி, ஆட்டோமொபைல், பைனான்சியல் சர்வீசஸ், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டாக பஜாஜ் குழுமம் வளர்ச்சி கண்டிருக்கிறது. சுகாதாரப் பராமரிப்பு துறையிலும் இது விரைவில் கால்பதிக்கவிருக்கிறது. இதன் பட்டியலிடப்பட்ட சில நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மென்ட், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் முகந்த் ஆகியவை முக்கியமானவை.

தேசக் கட்டமைப்பில் பஜாஜ் குழுமத்தின் பங்களிப்புகளை அங்கீகரித்து பஜாஜ் குடும்பத்தினருக்கு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அனுப்பியுள்ள செய்தியில், “பஜாஜ் குழுமத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில், இந்த மைல்கல் சாதனையுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு நிறுவனத்திற்கும் நூறு ஆண்டுகள் என்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது நீண்ட ஆயுளை மட்டுமல்லாமல், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறனையும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும், தலைமுறைகளைத் தாண்டி பொருத்தமாக இருப்பதையும் பிரதிபலிக்கிறது.

திரு ஜம்னாலால் பஜாஜ் தலைமையில் தொடங்கப்பட்ட பஜாஜ் குழுமம், நமது நாட்டின் வளர்ச்சியின் பல கட்டங்களில் இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார தளத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற பல்வேறு துறைகளில் செயல்படும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது;

பல தசாப்தங்களாக, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் வழியாகவும், சமூக மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதன் மூலமும் நம் நாட்டின் வளர்ச்சிக்கான கட்டமைப்பில் பஜாஜ் குழுமம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது போன்ற மைல்கற்கள் முக்கிய பங்களிப்புகளைப் பற்றி சிந்திக்கவும், அத்துடன் வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிக்கவும் ஒரு வாய்ப்பாகும்.

உற்பத்தி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் புதிய லட்சியங்களுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வடிவமைப்பதில் பஜாஜ் குழுமம் போன்ற ஆழமான வேர்களையும் செழுமையான அனுபவங்களையும் கொண்ட நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த மறக்க முடியாத தருணத்தில் பஜாஜ் குழுமம்பில் உள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டுகளிலும் முன்னேற்றம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள தொடர்ச்சியான பங்களிப்புகளை பஜாஜ் குழுமம் வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பஜாஜ் குழுமத்தின் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறப்பான முன்னெடுப்பு திட்டங்கள், 10 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா வளாகத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பஜாஜ் குடும்ப உறுப்பினர்கள், தொழில்துறை தலைவர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரபல ஆளுமைகள் மற்றும் பார்ட்னர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பஜாஜ் குடும்பத்தின் பங்கு, வர்த்தகத்தில் இருந்து உற்பத்தி மற்றும் நிதிசேவைகள் துறைகளுக்கு மாறிய நகர்வு, இன்று அதன் வணிக-தொழில் செயல்பாடுகளை வழிநடத்தும் புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் வரையிலான பஜாஜ் குடும்பத்தின் பயணத்தை இந்த மாலை நேர நிகழ்வு விவரித்தது.

பஜாஜ் குடும்பத்தினரின் உரைகள், கிராமி விருதாளரும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான ரிக்கி கேஜ் மற்றும் அவரது குழுவினரின் சிறப்பு நேரடி இசை நிகழ்ச்சி, ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ஜம்னாலால் பஜாஜ் மற்றும் மகாத்மா காந்தி பற்றிய திரைப்படமான ‘கத்னி கர்னி எக்ஸி’ திரையிடல் மற்றும் ‘100 இயர்ஸ் ஆஃப் பஜாஜ்’ லோகோ வெளியீடு ஆகியவை இந்நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சங்களாக இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள்:
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் திரு நீரஜ் பஜாஜ் கூறியதாவது: “பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி. பஜாஜ் மற்றும் இந்தியாவின் கதை பிரிக்க முடியாதது. நமது தற்சார்புப் பயணம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே எங்கள் நிறுவனர் ஜம்னாலால்ஜியால் தொடங்கப்பட்டது. ‘தனிப்பட்ட லாபத்தை விடப் பொது நலனே முக்கியம்’ என்ற அவரது தத்துவமே எங்களை வழிநடத்துகிறது. பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஜானகிதேவிஜி, காந்திய வழியில் வந்த கமல்நயன், ராம்கிருஷ்ணா பஜாஜ் மற்றும் கார்ப்பரேட் ஆளுமை ராகுல் பஜாஜ் ஆகியோர் இந்த அறத்தை முன்னெடுத்தனர். ‘இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவுக்காக உருவாக்குங்கள், இந்தியாவை உருவாக்குங்கள்’ என்பதே எங்கள் மாறாத லட்சியம்.”

உலகமயமாக்கல் என்ற தலைப்பில் பஜாஜ் ஆட்டோ-ன் நிர்வாக இயக்குர் திரு ராஜீவ் பஜாஜ் உரையாற்றிய போது, “பஜாஜின் பயணம் வளர்ச்சியின் கதை மட்டுமல்ல, இது நம்பிக்கையின் கதையும் கூட. இன்று, நாங்கள் உலகளவில் முதல் மூன்று இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளோம். எங்கள் வாகனங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகின்றன. பல்சர் பிராண்ட் உலகளாவிய நிறுவனங்களுக்கு நிகராக நிற்கிறது. கேடிஎம் (KTM) நிறுவனத்துடனான எங்கள் கூட்டணி, இந்திய நிறுவனங்கள் வெறுமனே பின்தொடர்பவர்கள் மட்டுமல்ல, உலகளாவிய பிராண்டுகளை இணைந்து உருவாக்கும் திறன் கொண்டவை என்பதை நிரூபிக்கிறது. இன்றைய இந்தியா உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.

பஜாஜ் இன்டெக்ரேட்டட் ஹெல்த் சிஸ்டம்-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு நீரவ் பஜாஜ், ‘உள்ளடக்கிய மேம்பாடு’ என்ற தலைப்பிலான தனது உரையில் கூறியதாவது: “வணிகமும் சமூகமும் பிரிக்க முடியாதவை. ஏழைகளுக்கும் பலனளிக்கும் வகையில் வணிகம் இருக்க வேண்டும் என்ற ஜம்னாலால்ஜியின் வழியில், லாபம் சமூகத்தை சென்றடைய வேண்டும் என நம்புகிறோம். எங்களின் சமூகப் பொறுப்புறுதித் திட்டமான ‘பஜாஜ் பியாண்ட்’ (Bajaj Beyond) மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வி மற்றும் வாழ்வாதாரத் திறன் மேம்பாட்டில் 2 கோடிக்கும் அதிகமான இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த இலக்கு வைத்துள்ளோம். கடந்த 100 ஆண்டுகள் நிறுவனங்களை உருவாக்குவதற்கானதாக இருந்தது; அடுத்த 100 ஆண்டுகள் சூழலமைப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டிருக்கும்.”

பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சஞ்சீவ் பஜாஜ், ‘இந்தியா மற்றும் அடுத்த 100’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் கூறியதாவது: “இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் இளைஞர்கள் மீது என் தந்தை ராகுல் பஜாஜ் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியாவின் அடுத்த அத்தியாயம் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர்களால் எழுதப்படும். செயற்கை நுண்ணறிவை (AI) வெறும் தொழில்நுட்பமாகப் பார்க்காமல், நிதிச் சேவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் சக்திவாய்ந்த கருவியாகவே பார்க்கிறோம். நிதிச் சேவைக்கான அணுகல் என்பது வாய்ப்புகளுக்கான திறவுகோல். திறமைக்குச் சரியான தளம் வழங்கப்பட்டால், ஒட்டுமொத்த நாடும் முன்னேறும் என்பதே எங்கள் நம்பிக்கை.”

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சேகர் பஜாஜ், ஜம்னாலால் பஜாஜின் மதிப்பீடுகள் மற்றும் அவர் ஏற்படுத்திய சமூக தாக்கம் குறித்து ஆற்றிய உரையில் கூறியதாவது: “ஜம்னாலால்ஜியின் சமூகப் பணிகள் சமூக சமத்துவம், பெண்கள் கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் பர்தா, வரதட்சணை ஒழிப்பு என விரிவான தளத்தில் இருந்தன. வெற்றியை வெறும் எண்களால் அளவிடாமல், நாங்கள் தாக்கம் ஏற்படுத்திய வாழ்க்கைகள் மற்றும் நிலைநிறுத்திய சமூக மதிப்பீடுகள் மூலமாகவே அளவிடுகிறோம். அடுத்த 100 ஆண்டுகளில் பஜாஜ் குழுமம் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், இதுவே எங்களின் எதிர்காலப் பயணத்தை வரையறுக்கும்.”

Tags : Bajaj ,Modi ,Bajaj Group ,India ,
× RELATED தமிழ்நாடு புகை ஒழிப்பில் முன்னோடி...