×

மனிதர்களின் அலட்சியம் பெரும் அபாயமாகும்; காலநிலை மாற்றத்தால் 2050க்குள்2 லட்சம் உயிரிழப்பு நிகழ வாய்ப்பு

இறைவன் படைப்பில் உருவான இந்த பூமி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ெபாதுவானது. அதேநேரத்தில் ஆறறிவு படைத்த மனிதன், நாம் தான் இந்த பூமியின் ஒட்டுமொத்த அதிபதி என்று கருதி அதற்கு சொந்தம் கொண்டாடுகிறான். ஆனால் இந்த பூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மறந்து பாழ்படுத்தி வருகிறான் என்பது இயற்ைக ஆர்வலர்களின் ஆதங்கம். எனவே இது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம்தேதி சர்வதேச பூமிதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியையும், அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு மக்கள் தங்கள் ஆதரவை நிரூபிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் பல்வேறு ஆய்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் வந்துள்ளது என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் மனிதன், சுத்தமான காற்று, வற்றிடாத தண்ணீர், நோயில்லா வாழ்க்கை என்பதற்கெல்லாம் வழிகண்டுவிட்டானா என்றால் அதற்கெல்லாம் விடையில்லை.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் பேராசையோ, போதும் என்ற மனமின்றி இயற்கையை அழித்து செயற்கைப் பொருட்களை உருவாக்கத் தொடங்கியது. அதன் ஒரு தொடக்கமாகத்தான் காடுகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் உறைவிடங்கள் அபகரிக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் நிற்கின்றன.

இப்படியே நாம் தொடரமுடியாது என உலகம் உணர்ந்து வருகிறது. இயற்கையை சேதப்படுத்துவதால் காலநிலை மாற்றம் என்பது பூதாகர பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் 2030-2050 ஆண்டு வரை சுமார் 2லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மறுபுறம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இன்று நிலம், நீர், காற்று மாசு என்று சுற்றுச்சூழல் மாசுபடுதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அன்றாடம் சுற்றித்திரிந்த சிட்டுக்குருவி இனங்கள் இன்று காண்பதற்கு அரிதாகிப் போனது. 2050ம் ஆண்டிற்குள் ஐம்பது விழுக்காடு உயிரினங்கள் பூமியிலிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொள்ளும் என்ற தகவல் மிகவும் வேதனை தருகிறது. 2100ம் ஆண்டுக்குள், உலகில் காலநிலை பிரச்னைகள் அதிகமாகும் என்றும், மேகவெடிப்பு, சுனாமி, பெருவெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் பல நாடுகள் அழியக்கூடும் என்றும் தொடர்ந்து ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பூமி தினத்தில் பூமியை காக்க வேண்டும் என்று அனைவரும் உறுதியேற்று, தங்களால் முடிந்த சிறிய மாற்றங்களை செயல்படுத்த வேண்டும். மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூமியின் சுற்றுச்சூழலை காக்க துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

454 கோடி ஆண்டுக்கு முன்பே உருவானது
‘‘ஏறக்குறைய 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமியை, எந்த மனிதனும் திட்டம் போட்டு உருவாக்கவில்லை. மனித குலம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை தன் மடியில் தாங்கிக்கொள்ள எழில் நிறைந்து பிறந்ததுதான் இந்த பூமி. பூமியின் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் முக்கால்வாசி பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. பூமியின் மொத்த நீரில் 97 சதவீதம் கடல்களில் உப்பு நீராக உள்ளது. இது தவிர, பூமியின் 90சதவீதம் தூய்மையான நீர் பனிக்கட்டியில் அடைக்கப்பட்டுள்ளது. காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என்று அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி,’’ என்பதும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு ஆர்வலர்களின் பெருமிதம்.

மாற்றத்திற்கு காரணம் மனித வாழ்க்கை முறை
பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு மனிதர்களாகிய நாமும், நமது வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும், கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம். இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும் என்பதை உணராமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை. நமது பயன்பாடும், வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்பது ஆய்வாளர்களின் ஆதங்கம்.

நடப்பாண்டு நோக்கம் நமது சக்தி, நமது கிரகம்
பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பையும், மனித குலத்துடனான அதன் உறவையும் பாதுகாக்க வேண்டியது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. இதற்காக மரங்களை நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், வனங்களை பாதுகாத்தல், காகித கழிவுகளை குறைத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை இலக்காக கொண்டு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்ெவாரு பொருளில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தவகையில் (2026) நடப்பாண்டு ‘நமதுசக்தி, நமது கிரகம்’ என்ற பெயரில் பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறி, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மக்கள், நிறுவனங்கள், அரசுகளின் பொறுப்பை இந்த கருப்பொருள் மையமாக ெகாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : God ,earth ,
× RELATED 100 ஆண்டுகள் சேவையில் பஜாஜ்: சுதந்திரப்...