இந்தியாவில் 25 மாநிலங்களில் மொத்தம் 13,056 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி, சிக்கிம், கோவா ஆகியவற்றின் மொத்த நிலப்பரப்பை விட அதிகம் என்று சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்ைக அளித்துள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 5,461 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 3,621 சதுர கிலோ மீட்டர் என்ற அளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 157 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவு வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டுள்ளன. இதில் 409.77 சதுரகிலோ மீட்டர் வனப்பரப்பு மட்டுமே ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்றும் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ெதரிவித்துள்ளது. இது இயற்கை மேம்பாடு சார்ந்த வனஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனஉயிரின மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதி ஆக்கிரமிப்பு என்பது தொடரும் அவலமாக உள்ளது.
இதை வனப்பரப்பு ஆக்கிரமிப்பு என்று சொல்வதை விட, ‘அரிய உயிரினங்களின் வாழ்விட அழிப்பு’ என்றே சொல்ல வேண்டும். இந்த வாழ்விட அழிப்பு என்பது வனங்களில் உள்ள உயிரினங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகளவில் சராசரியாக 33.3 சதவீதம் வனப்பகுதி உள்ள நிலையில், இந்தியாவில் 21 சதவீதம் அளவுக்கே வனப்பகுதிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்று உலக இயற்கை வளஅமைப்பின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகள், பறவைகள், பாசிகள், பூச்சிகள் என்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் சிக்கி இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.
இந்த வனங்கள் தான் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. வனங்களை ஆக்கிரமித்து அழிக்கும் போது பல்லுயிர் பெருக்கமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது மட்டுமன்றி ஓரினச்சேர்க்கை மூலம் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி பூமியின் காலநிலையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு பல்லுயிர்களும் துணைநிற்கிறது. இதேபோல் மண்அரிப்பு, நீர்சுழற்சி ேபான்ற இயற்கை பேரிடர்களுக்கும் காடழிப்பு என்னும் வனப்பரப்பு ஆக்கிரமிப்பே காரணமாகிறது. எனவே வனங்களை காப்பதன் மூலம் மட்டுமே அரிய உயிரினங்களையும் காப்பாற்ற முடியும்.பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிரியல் பன்முகத்தன்மையால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் நடைமுறைகளை சார்ந்தே உள்ளது.
நீடித்த வளர்ச்சி என்பதும் இயற்கை வளங்களை சிக்கனமான முறையில் திறம்பட பயன்படுத்துவதையே உணர்த்துகிறது. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை வளங்களை நம்பியுள்ள ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இயற்கை வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பது உலகளாவிய இலக்காக உள்ளது. இது நிறைவேற வேண்டும் என்றால் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களின் தேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு வனப்பரப்பு ஆக்கிரமிப்பை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
நவீன வளர்ச்சிக்கு பிறகே அவலங்கள்
வனப்பகுதி ஆக்கிரமிப்பு போன்ற மனித நடவடிக்கைகள், உயிரினங்களை பாதிக்கும் விரைவான மற்றும் பரவலான சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 99 சதவீதம் உயிரினங்கள் மனித நடவடிக்கைகளால் மட்டுமே அச்சுறுத்தலில் உள்ளன. இதில் பல உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான உயிரியல் மாற்றங்களை செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவும் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகமான உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளது. 19ம் நூற்றாண்டில் இருந்து தான், உயிரினங்களின் இயற்கை சூழலுக்கு அவலம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகரித்து நவீனவளர்ச்சிகள் உருவான பிறகு தான், வனப்பகுதி ஆக்கிரமிப்பும், அரிய உயிரினங்களை அழிப்பதும் அதிகளவில் நடந்து வருகிறது என்பது பல்லுயிர் சார்ந்த ஆய்வாளர்களின் ஆதங்கம்.
அழிவின் பிடியில் அரிய உயிரினங்கள்
நாம் வாழும் பூமியில் ஆயிரக்கணக்கான தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாசிகள் உள்ளன. இவை அனைத்தும் அரிய உயிரினங்கள் என்ற பட்டியலில் உள்ளன. மனிதகுலம் உயிர் வாழ்வதற்கு உயிரியல் பன்முகத்தன்மை என்பது மிகவும் அவசியம். இயற்கையின் இயல்பான நிகழ்வுகளுக்கும் அரிய உயிரினங்கள் துணைநிற்கிறது. அதேநேரத்தில் மனிதனால் நிகழ்த்தப்படும் வேட்டையாடுதல், நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு காரணங்களால் அரிய உயிரினங்கள் அழிவின் பிடியில் சிக்கி வருகிறது. இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (ஐயூசிஎன்) உலகம் முழுவதும் 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
உலகில் வேறு எங்குமில்லை
உலகநாடுகளில் இல்லாத தனித்துவமான சில விலங்கினங்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. உலகின் பழைய குரங்கினமாக கருதப்படும் சிங்கவால்குரங்கு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது. நீலகிரி வரையாடுகள் தமிழ்நாடு, கேரளாவில் உள்ளது. இது தென்னிந்தியாவின் தனித்துவ உயிரினமாக கருதப்படுகிறது. காஷ்மீர் கங்குல் எனப்படும் சிவப்பு மான்கள், உலகின் பழமையான உயிரினம் என்று கருதப்படும் கங்கைடால்பின், மணிப்பூரில் உள்ள சங்காய் எனப்படும் முன்மண்டைக்ெகாம்புடைய மான், இந்திய மூக்கு கொம்பன் எனப்படும் காண்டாமிருகம், மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ராட்சத அணில் போன்றவை உலகில் வேறு எங்கும் இல்லை. இதை உணர்ந்தும் அரிய உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் வனஉயிரின ஆர்வலர்கள்.
