காஞ்சிபுரம்: இம்மாதம் 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளை கடமைக்காக கொண்டாடிவிட்டு போகிறோம். அதனால்தான் புகை இன்று நமக்கு பகையாகி நிற்கிறது. எயிட்ஸைவிட கொடுமையானது புகை. காரணம் எயிட்ஸ் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் பரவி வருகிறது. இதில் அவரவர் விருப்பமும் அடங்கி இருக்கிறது. ஆனால் புகை பிடிப்பவரைவிட அந்தப் புகையை அவர் இழுத்து வெளியே விடும்போது பக்கத்தில் இருப்பவருக்கு அந்தப் பழக்கம் இல்லை என்றாலும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால்தான் எயிட்ஸைவிட கொடுமையானது புகை. ஒன்றிய அரசு கடந்த 2008ம் ஆண்டு பொது இடங்களில், பணியிடங்களில் புகைபிடிக்க தடை விதித்துள்ளது.
இதை தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் வருங்காலத்தூண்கள் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் ஆகிவிடும். காரணம் வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி புகைபிடிப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான். மேலும், உலக அளவில் புகைபிடிப்பவர்களில் 6 நொடிக்கு ஒருவர் இறப்பதும், இந்தியாவில் 2,500 பேர் புகையால் இறக்கின்றனர் என்ற புள்ளிவிவரமும் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே, பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள்,பேருந்துகள் அதிகம் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்க உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் 100 மீ தூரம்வரை இவற்றை விற்க தடைவிதிக்க வேண்டும்.
புகைபிடிக்க தடைசெய்யப்பட்ட பகுதி என்பதை அறிவுறுத்தும் தகவல் பலகைகளை வைக்க வேண்டும். பொது இடங்களில் மற்றும் பணி இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்க வேண்டும். இவற்றை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த செயலில் அரசை மட்டும் குறை கூறுவதை விட்டுவிட்டு நாமும் அதற்காக பாடுபடவேண்டும். இது சாத்தியம்தானா? என்று தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் ஏற்படுத்தும் தீய விளைவுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் சமூக கல்வி அறக்கட்டளை இயக்குநர் ஜோசப்ராஜ் அவர்களிடம் கேட்டதற்கு, கண்டிப்பாக சாத்தியம்தான். இந்த சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்தினால் கண்டிப்பாக சாத்தியமே.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கிய வாரணவாசி ஊராட்சியில் புகை மற்றும் புகையிலை பொருட்களை தடைவிதித்து கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி அதை சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி இன்று புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்றி ஒன்றிய, மாநில அரசுகள் விருதையும் பெற்றிருக்கிறார்கள் என்றார். அந்த ஊராட்சியின் வரிசையில் பல ஊராட்சிகள் அந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். ‘‘புகையிலை நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்து, புகையிலை பொருட்களின் உற்பத்தியை தடை செய்’’ என்று வெறும் கோஷங்கள் போட்டு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வெறுங்கையோடு நிற்பதோடு, அந்த போராட்டம் முடிவதற்குள் இன்னும் பல உயிர்கள் பலியாவதுதான் மிச்சம்.
எனவே மிச்சம் இருக்கும் மனித உயிர்களை காப்பாற்றும் நோக்கில் புகை தடுப்பு யுத்தத்திற்கு நம்மை நாமே ஆயுதங்களாக்கி ஒருவர் புகைபிடிப்பதால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது என்பதை பொறுப்புணர்வுடன் அவர் உணரும் வகையில் உணர்த்தி அவரை மனம் மாற்றி, இந்த மாற்றம் அவரோடு நின்றுவிடாமல் ஒரு ஊர், ஒரு மாவட்டமாக உருவெடுக்க வேண்டும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை புகையில்லா மாவட்டமாக உருவெடுத்திடவும், இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் புகையில்லா மாவட்டம் என்ற பெருமையையும் நம் ஒவ்வொருவருடைய கையில்தான் உள்ளது என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், நூலகங்கள், மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு அரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், கடைகள், தேநீர் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நீதிமன்ற வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அரசால் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களாக கருதினாலும் ஒவ்வொரு தனி மனிதரும் பொதுமக்கள் கூடும் இடங்களில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்பதே நமது ஆசையாக உள்ளது.
அடுத்தவர் வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் கொடிய நோய்கள்
* மூளைக்கட்டி
* நிணநீர் திசுக்கட்டி
* மூக்கடைப்பு,சைனஸ்
* வாய்ப் புற்றுநோய்
* நெஞ்சக நோய்கள்
* மார்பாக புற்றுநோய்
* ஆஸ்துமா
* மூச்சுக்குழல் நோய்கள்
* ரத்தப் புற்றுநோய்கள்
* இனப்பெருக்க பாதிப்புகள்
* தமணித்துடிப்பு இறுக்கம்
பொது இடம், தடுக்க அதிகாரம் படைத்தவர்கள்
அனைத்து பொது இடங்கள்: வருமானவரி ஆய்வாளர்கள், சுகாதார இயக்குநர்கள், மத்திய மாநில நிர்வாகத்தலைவர்கள், புகையிலைத் தடுப்பு இயக்கத்தின் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள். தனியார் அலுவலகங்கள், உணவகம், திரையரங்கம்,
தொழிற்சாலை போன்ற தனியார் இடங்கள்: அந்த இடத்தின் தலைவர் அல்லது பொறுப்பாளர் (உரிமையாளர், மேலாளர், மேற்பார்வையாளர்)
கல்வி நிலையம்: கல்வி நிலையத் தலைவர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்
மருத்துவமனை: தலைமை மருத்துவர், இயக்குநர், மேற்பார்வையாளர்
நூலகம்: நூலகர், உதவியாளர். அரசு அலுவலகம்: கெஸட்டட் அதிகாரிகள்,
அஞ்சலகம்: தலைமை அஞ்சலக அதிகாரிகள் ரயில்கள்: நிலைய அதிகாரிகள்.
சிகரெட், பீடியில்
உள்ளநச்சுகள்:
* தொலுப்டின்
* யூரிதேன்
* நெப்திலெமின்
* பைரீன்
* டிபென்ஷாக்ரைடின்
* அசிடோன்
* ஆர்சனிக்
* காட்மியம்
* கரியமிலவாயு
* பென்சோபிரின்
* வினைல் குளோரைடு
* பினாயில்
* புட்டேன்.
