×

தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த 3 யானைகளை காட்டிற்குள் விரட்டிய வனத்துறை

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த 3 யானைகளை காட்டிற்குள் வனத்துறையினர் போராடி விரட்டியடித்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சோளகர் தொட்டி பழங்குடியின கிராமத்திற்குள் 3 காட்டு யானைகள் நுழைந்து விவசாய தோட்டத்தில் நடமாடின.

இது குறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீரஹள்ளி வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பும் வாகனத்துடன் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணி மேற்கொண்டனர். காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகே உள்ள திகினாரை ரங்கசாமி கோவில் தோட்டம் பகுதிக்கு சென்றன. விடாமல் துரத்திய வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். உணவு தேடி அடிக்கடி இரவில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் மலை கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Forest department ,Thalavadi hill ,Sathyamangalam ,department ,Erode district ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில்...