சென்னை: கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். தமிழக முதல்வர் விஜய், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப் பெண் திட்டம் கொண்டு வந்துள்ளார். இதனால் ஏற்கனவே இருந்த முதல்வர்கள் பெண்களின் பாதுகாப்புக்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தனர் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காவல்துறையில் திமுக தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது, இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழக காவல்துறையில் பெண்களை கடந்த 1973ம் ஆண்டு பணியில் சேர்க்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழகத்தை பின்பற்றி நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் பெண்களை காவல்துறையில் சேர்த்தனர். இவர்கள் காவல்நிலையங்களில் பெண்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். பெண்களின் குறைகளை ஆண்களிடமே கூறும்நிலை உருவாகியிருந்தது. அதை கலைஞரின் நடவடிக்கையில் மாற்றியமைக்கப்பட்டது.
மேலும், தமிழக காவல்துறையில் பெண்களை பணிக்கு எடுத்தது 50ம் ஆண்டுகள் நிறைவு விழா கடந்த 2023ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாநிலம் முழுவதும் பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. அப்போது பெண் காவலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. கலைஞர் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டில் பெண்களை பாதுகாக்கும் வகையில் ‘plain clothes woman police’ என்ற சீருடையில்லா பெண் காவலர்கள் திட்டம் தொடங்கப்பட்டு, பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை தடுக்கவும், முன்கூட்டியே பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக பணிகள் நடந்தது வந்தது. அதன் பிறகு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தமிழகத்தில் கடந்த 1992ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கினார்.
அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை முந்திய ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்களுக்கு என ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புலன் விசாரணை செய்யும் பிரிவு, சிறப்பு இளஞ்சிறார்கள் காவல் பிரிவு, குழந்தைகள் நல காவல் அலுவலர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு என பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் புலன் விசாரணை செய்யவும் அமைக்கப்பட்டுள்ளது இன்றளவும் இந்த சிறப்பு பிரிவுகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக காவல்துறையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CWC) தொடங்கப்பட்டது. ஐஜி தலைமையில் ஒரு டிஐஜி, ஒரு எஸ்பி ஆகியோருடன் தொடங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையில் ஒரு துணை கமிஷனர் தலைமையிலும், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 6 மாநகரங்களில் தலா ஒரு கூடுதல் துணை கமிஷனர் தலைமையிலும், 24 மாவட்டங்களில் தலா ஒரு கூடுதல் எஸ்பி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு செயல்பாட்டில் உள்ளது.
இதுதவிர இந்த பிரிவின் கீழ் மாநிலம் முழுவதும் 244 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகள், 7 பெண்களுக்கு எதிரான குற்றங்களை புலன் விசாரணை செய்யும் பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள், 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் இயங்கி வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்புக்காக ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற செயலி திட்டம், பாதுகாப்பான நகரம் திட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் வடக்கு மண்டல காவல்துறை சார்பில் ‘இமைகள் திட்டம்’, பெண்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் இலவசமாக புகார் அளிக்கும் வகையில் பெண்கள் உதவி எண் :181, குழந்தைகள் உதவி எண்: 1098 அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையவழி மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு என இணையவழி குற்ற காவல் நிலையங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்புடைய இணையவழி குற்றங்கள் தடுக்கும் வகையில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு கோவை போன்ற மாவட்டங்களில் பெண்களை பாதுகாக்கும் வகையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண் எஸ்ஐ தலைமையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக காவல்துறையில் ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள் தொடங்கி வைத்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பிரிவுகளையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் பெண்கள் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் மாவட்டம் மற்றும் மாநகரங்கள் வாரியாக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்படும் என்று தனது இரண்டாவது கையெழுத்தை போட்டார். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சீருடையில்லா போலீஸ் திட்டத்தையை புதுப்பிக்கும் வகையில் ஐஜி தலைமையில், ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள், 20 போலீசார் கொண்டு பெயரை மட்டும் மாற்றி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் தேர்தல் அறிவிப்பில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் பழைய பிரிவின் பெயரை மீண்டும் தூசி தட்டி ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்று பெயர் மாற்றப்பட்டு புதிய திட்டம் போன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
