×

சேலத்தில் குடிபோதை தகராறில் பயங்கரம் வாலிபரை கத்தியால் சரமாரி வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள்: கொலையை வீடியோ, போட்டோ எடுத்த கொடூரம்

 

சேலம்: சேலத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 19 வயது வாலிபரை சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற 16 வயததான 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலையை செல்போனில் வீடியோ, போட்டோவாக எடுத்து வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கோகுல் (19), 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு அன்னதானப்பட்டி மணியனூரை சேர்ந்த 16 வயதுள்ள 2 சிறுவர்கள், 15 வயதான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 சிறுவர்களும் மணியனூரில் உள்ள பள்ளியில் 9, 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். கோகுல், அவ்வப்போது நண்பர்களான 3 சிறுவர்களையும் அழைத்து சென்று மது குடிப்பது வாடிக்கை. அதன்படியே நேற்று முன்தினம் மாலை, 4 பேரும் ஒரே பைக்கில் மது குடிக்க மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு ஜருகுமலை அடிவாரத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு, 4 பேரும் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், கோகுலிடம் 3 சிறுவர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஏற்கனவே எடுத்துச் சென்றிருந்த கத்தியால் கோகுலை சரமாரியாக வெட்டியுள்ளனர். தலை, முகம், கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி, கோகுலை படுகொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பைக்கில் 3சிறுவர்களும் மணியனூருக்கு திரும்பியுள்ளனர். வழியில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு கிராமத்தில் எதிரே பைக்கில் வந்த வைடூரியன் (60) என்பவர் மீது மோதியுள்ளனர். இதில், 2 பைக்கும் கீழே சரிந்து விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் போதையில் இருந்த 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், இப்போது தான் ஒருத்தனை கொலை செய்து போட்டுவிட்டு வந்துள்ளோம் எனக்கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து 3 சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வாலிபர் கோகுலை கொலை செய்ததை தெரிவித்தனர். உடனே அவர்களை சம்பவம் நடந்த ஜருகுமலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தலை, முகத்தில் பலத்த ரத்த காயத்துடன் கோகுல் கொலையுண்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிக்கிய 3 சிறுவர்களையும் கைது செய்து, மல்லூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் தெரியவந்தது. கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஊர் சுற்றி வந்த கோகுல், 3 சிறுவர்களுடன் மாமா, மச்சான் என பேசி பழகி வந்துள்ளார். ஆனாலும், அந்த 3 பேரிடமும் தான் சொல்வதை தான் கேட்கவேண்டுமென அதிகாரம் செலுத்தி வந்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு சிறுவனின் பெற்றோரிடம் உங்கள் மகன் சிகரெட் பிடிப்பதாக கூறியுள்ளார்.

அச்சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், கோகுல் மீது 3 சிறுவர்களும் ஆத்திரம் கொண்டுள்ளனர். சம்பவத்தன்று 3 சிறுவர்களில் ஒரு சிறுவனின் பைக்கில் கோகுலை அழைத்துக்கொண்டு ஜருகுமலை அடிவார பகுதிக்கு சென்று, மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், 3 பேரும் சேர்ந்து கோகுலை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி வந்தது, விசாரணையில் தெரியவந்தது. இக்கொலையில் ஈடுபட்ட சிறுவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பரிசோதித்து பார்த்தபோது, கோகுல் கொலையுண்டு கிடந்த வீடியோ, போட்டோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்குப்பின் 3 சிறுவர்களையும் சேலம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போதை தகராறில் வாலிபரை 3 சிறுவர்கள் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Salem ,
× RELATED VB G RAM G திட்டம் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!