×

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்தால் தாஜ்பூர் துறைமுக திட்டம் அதானி வசமாக வாய்ப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக ரூ.25,000 கோடி மதிப்பிலான தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுக திட்டம் மீண்டும் அதானி வசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா துறைமுகத்தில் நெருக்கடியை குறைக்கவும், கிழக்கு இந்தியாவில் கடல்சார் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் தாஜ்பூர் ஆழ்கடல் துறைமுக திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 2021ல் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு டெண்டர் கோரியது. இதில், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இத்திட்டம் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் அதானி உடனான ஒப்பந்தத்தை கடந்த 2025ல் மம்தா அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து உலகளாவிய டெண்டர் வெளியிடப்பட்டது. துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்துறை வசதிகளை மேம்படுத்த 1000 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் எனவும் மம்தா அரசு அறிவித்தது. ஆனால் சரியான நிறுவனங்கள் ஏலத்தில் கண்டறியப்படாததால், டிசம்பர் 2025ல் வெளியிடப்பட்ட இந்த டெண்டரை மேற்கு வங்க தொழில்துறை மேம்பாட்டு கழகம் ரத்து செய்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தற்போது தேர்தலைத் தொடர்ந்து பாஜ ஆட்சி அமைக்க இருப்பதால் மீண்டும் தாஜ்பூர் துறைமுக திட்டம் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த திட்டம் அதானி துறைமுக நிறுவனத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய கப்பல்களை நேரடியாக நிறுத்துவதற்கு வழிவகுக்கும் தாஜ்பூர் துறைமுகம், சரக்கு மாற்று மையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தளவாட செலவுகளை குறைப்பதன் மூலமும் கிழக்கு இந்தியாவின் வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் கூறுகின்றனர்.

 

Tags : Tajpur ,Adani ,West Bengal ,Kolkata ,Kolkata port ,eastern India ,
× RELATED மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு...