டெல்லி: பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒருநாடு நிறைவடைகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியையும், தேசிய பாதுகாப்பைப் பேணுவதில் உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ஓராண்டுக்கு முன்பு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையின் போது, நமது ஆயுதப்படை வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி, நம் மக்களைத் தாக்கியவர்களுக்கு ஒரு உறுதியான பதிலடி கொடுத்தனர். நமது ஆயுதப்படைகளைக் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார். நமது படைகளுக்கும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அவர்கள் ஈட்டிய வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் அடையாளமாக எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள்ள நமது சுயவிவரப் படங்களை (Display Pictures), கீழே பகிரப்பட்டுள்ள படமாக நாம் அனைவரும் மாற்றுவோம்” என்று குறிப்பிட்டு தனது போஸ்டில் Operation Sindoor என்று நம் நாட்டு தேசிய கொடி மற்றும் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.
பிரதமர் மற்றொரு எக்ஸ் போஸ்டில், “ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி, நமது வீரர்களின் குறிப்பிடத்தக்க வீரத்திற்கும் தேசபக்திக்கும் ஓர் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவர்களின் அசைக்க முடியாத தைரியம், தளராத உறுதி மற்றும் கடமையுணர்வு ஆகியவற்றில் பெருமிதம் கொள்கிறான் என்று குறிப்பிட்டு உள்ளார்.மேலும் ஆபரேஷன் சிந்தூரின் போது நமது ஆயுதப் படைகளின் தொழில்முறைத் திறனையும், தயார்நிலையையும், ஒருங்கிணைந்த வலிமையையும் உலகிற்கு தெரிந்தது.
அதே நேரத்தில், அது நமது படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியதுடன், பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான இந்தியாவின் தேடல் நமது தேசியப் பாதுகாப்பிற்கு சேர்த்துள்ள வலிமையையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. இன்று, ஓராண்டுக்குப் பிறகு, பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, அதற்குத் துணைபுரியும் சூழலை அழிப்பதற்கான நமது உறுதியில் முன்பைப் போலவே நாம் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.
