×

வாக்கு எண்ணும் பணி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மனு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மேற்கு வங்க தேர்தலில் வாக்கு எண்ணும் பணியில் 2 ஒன்றிய அரசு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு ஒன்றிய அரசு ஊழியருடன் மாநில அரசு ஊழியரையும் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 23ம் தேதி மற்றும் 29ம் தேதி என இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு எதிராக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, ‘வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களாக ஒன்றிய அல்லது மாநில அரசு அதிகாரிகளை நியமிப்பது என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம். அதில் தலையிட முடியாது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாகவோ அல்லது பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவோ கண்டறியப்பட்டால் வழக்கு தாக்கல் செய்யலாம்’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது சிறப்பு அமர்வு நீதிபதிகளான பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பாக்‌ஷி அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘ஒன்றிய அரசு அதிகாரிகளை மட்டும்தான் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்த வேண்டும் என்ற இந்த சுற்றறிக்கை, எங்களுக்கு ஏப்ரல் 29ம் தேதி அன்றுதான் தெரியவந்தது. ஆனால் அந்த சுற்றறிக்கை முன்கூட்டியே மேலதிகாரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பிரச்னை ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாக தேர்தல் ஆணைய தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு ஒன்றிய அரசு பிரதிநிதி இருக்கிறார். இப்போது மேலும் ஒருவரை நியமிக்க விரும்புகிறார்கள். இது சட்டப்பிரிவு 324க்கு எதிரானதாகும். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவாகும் சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜாய்மால்யா பாக்‌ஷி, ‘வாக்கு எண்ணும் உதவியாளர், ‘வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் மற்றும் நுண்கண்காணிப்பாளர் ஆகியோரும் ஒன்றிய அரசு அதிகாரிகள்தான். அவர்களில் ஒருவர் ஒன்றிய அரசு அதிகாரி என்பதால் இந்த அறிவிப்பு விதிமுறைகளுக்கு முரணானது என்று நாம் கருத முடியாது. ஆனால் மற்றவர்கள் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருக்க முடியாது என்று கூறப்படவில்லை என்று விளக்கமளித்தார். அப்போது தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாவட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுபவர் மாநில அரசின் ஊழியர்தான். அப்படி இருக்கையில் வேண்டுமென்று இந்த விவகாரத்தில் சர்ச்சையை கிளப்புகின்றனர்.

குறிப்பாக வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது பதிவு செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் 45 நாட்களுக்கு பாதுகாத்து வைக்கப்படும். எனவே இதில் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக முந்தைய சுற்றறிக்கையை அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்களோ அல்லது மாநில அரசு ஊழியர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்களோ என்பது அல்ல. மாறாக, தேர்தல் ஆணையத்தின் திருப்தியே இந்த விவகாரத்தில் கருத்தில் எடுத்து கொள்ள முடியும். குறிப்பாக தேர்தல் ஆணையம் முந்தைய சுற்றறிக்கையை அமல்படுத்துகிறோம் என்று கூறியதை அடிப்படையாக கொண்டு இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம்.

அதாவது, கடந்த 29ம் தேதி தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்பார்வையாளர் அல்லது இணை மேற்பார்வையாளராக மாநில அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விவகாரத்தை அமல்படுத்த வேண்டும். மேற்கு வங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மேற்பார்வையாளர்களாக மாநில அரசு ஊழியர்களையும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் கூடுதலாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Trinamul Congress ,Supreme Court ,Election ,Commission ,Delhi ,EU ,West Bengal ,
× RELATED வரும் 5ம் தேதி முதல் சென்னையில் ஹாஸ்டல், PG வாடகை அதிகரிப்பு!