×

தட்டுப்பாடு காரணமாக கள்ளச்சந்தையில் ரூ.7000க்கு விற்பனை வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு: ஓட்டல்கள் மூடும் அபாயம்

சேலம்: நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை நேற்று ரூ.993 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரேநாளில் ரூ.1000 அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு ரூ.3 ஆயிரத்தை தாண்டியதால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் தடுமாறி வரும் நிலையில், இந்த விலை உயர்வால் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரத்துக்கும் சிலிண்டர்கள் விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. இதனிடையே ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் காஸ் சிலிண்டர் விலையில் கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றத்தை ஏற்படுத்தி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.913.50, கொல்கத்தாவில் ரூ.939, சென்னையில் ரூ.928.50, சேலத்தில் ரூ.946.50 என அதிகரித்தது. வர்த்தக சிலிண்டர் விலையை மட்டும் ரூ.100, ரூ.150, ரூ.250 என அடுத்தடுத்து ஏற்றினர். இதனால் நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை கடந்து ரூ.2200 முதல் ரூ.2250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (மே) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று அதிகாலை வெளியிட்டது. அதில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மார்ச் 7ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட அதேவிலை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இதுவரை வரலாறு காணாத வகையில் ஒரே நேரத்தில் ரூ.990 முதல் ரூ.1000 வரை அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியது. ஒருசில நகரங்களில் ரூ.3300ஐ நெருங்கி உள்ளது. கடந்த மாதம் சென்னையில் ரூ.2,246 ஆக இருந்த நிலையில் நேற்று ரூ.993 உயர்ந்து ரூ.3239 ஆக அதிகரித்துள்ளது. இதுவே சேலத்தில் ரூ.2195 ஆக இருந்தது ரூ.991 உயர்ந்து ரூ.3186 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.3,071, கொல்கத்தாவில் ரூ.3,202, மும்பையில் ரூ.3,021ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படை தாக்குதல் நீடித்து வரும் நிலையில் அவ்வப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்து, ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை 3 கட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஈரான் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹர்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடி வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கப்பல்கள் கடப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன் அவ்வழியே வந்த 2 இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் பாதிப்பிற்குள்ளான எண்ணெய் கப்பல்கள் பின்நோக்கி நகர்ந்தன.
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய காஸ் சிலிண்டர் நிரப்பக்கூடிய எல்பிஜி எரிபொருளுடன் 15க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வளைகுடா பகுதியில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒருமாதமாக தொடர்ந்து, அதிகரித்து வந்த நிலையில், மிக அதிகபட்சமாக வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 125 டாலராக நேற்று முன்தினம் உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் உலக நாடுகளையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் கச்சா எண்ணெய் பீப்பாய் 125 டாலர் என உயர்ந்துள்ளதுடன், டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 95ஐ தாண்டி உள்ளதால் பணவீக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக எரிபொருட்களின் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக விலை ஏற்றப்படாமல் இருந்தது. கடந்த 29ம் தேதியுடன் தேர்தல் நிறைவடைந்த நிலையில் நேற்று (மே 1) எரிபொருட்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு உயர்த்தி உள்ளது.

ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை உயர்த்தாமல் கடந்த மாத விலையில் நீடிக்க செய்துவிட்டு, வர்த்தக சிலிண்டர் விலையை வரலாறு காணாத வகையில் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளனர். முக்கிய நகரங்கள் அனைத்திலும் வர்த்தக சிலிண்டர் ரூ.3,200க்கும் மேல் விற்பனை செய்யப்படுவதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் எல்பிஜி காஸ் பிளாண்ட்டுகளில் இருந்து வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஓட்டல்களுக்கு 20 சதவீதம் மட்டும் வழங்கும் நிலையில், தற்போது விலையும் பெருமளவு உயர்ந்ததால் ஓட்டல்களை மூடும் சூழலுக்கு ஓட்டல் அதிபர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதோடு டீ கடைகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 75 சதவீத ஓட்டல்களே இயங்கி வரும் நிலையில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தால் மேலும் 25 சதவீத ஓட்டல்களை மூடும் நிலை உருவாகி உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்களில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், ஓட்டல்களில் சாப்பிட்டுவரும் நிறுவன ஊழியர்கள் உணவுக்காக சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என பல்வேறு வகையான உணவு வகைகள் நிறுத்தப்பட்டு வெரைட்டி ரைஸ் என்ற கலவை சாதம் மட்டுமே விற்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும், பேக்கரிகளில் ஸ்வீட், காரம் உள்ளிட்ட தின்பண்டங்களின் விலையும் தற்போது உள்ளதை விட 2 மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வர்த்தக காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது. ஒரு சிலிண்டர் ரூ.2200 முதல் ரூ.2250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி முக்கிய பெருநகரங்களில் கள்ளச்சந்தையில் அதிகபட்சம் ரூ.10000 வரை வர்த்தக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிக விலை கொடுத்து சிலிண்டரை வாங்கி தொழில் செய்து லாபம் எடுக்க முடியாத பல கடைகள் மூடப்பட்டன. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும் காஸ் விலை குறையவில்லை. கள்ளச்சந்தையில் ரூ.5000 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது நடப்பு மாதத்திற்கான (மே) வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ.993ஐ அதிரடியாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

இதன் மூலம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியுள்ளதன் காரணமாக உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில், வர்த்தக காஸ் சிலிண்டருக்கான டிமாண்ட் காரணமாக கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரம் வரையில் விற்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதை தடுக்க, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்களை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் சிலிண்டர் விலை
நகரம் வீட்டு சிலிண்டர் வர்த்தக சிலிண்டர்
டெல்லி ரூ.913 ரூ.3,071
மும்பை ரூ.913.50 ரூ.3,021
கொல்கத்தா ரூ.939 ரூ.3,202
சென்னை ரூ.928.50 ரூ.3239

* விரைவில் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை
காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை விரைவில் உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை பேரல் 126 டாலரை எட்டியது. பின்னர் சிறிது குறைந்தாலும் 110 டாலருக்கு மேல்தான் நீடிக்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், அமெரிக்காஈரான் இடையிலான பதற்றமும் இந்த உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்க தேர்தல்கள் நடைபெறுவதால் விலை உயர்த்துவது ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

தேர்தல் முடிந்து விட்டதால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயரக்கூடும் என சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர். சமீபத்தில் ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.20 மற்றும் டீசலுக்கு ரூ.100 இழப்பை சந்திப்பதாகவும், எனினும் உடனடி விலை உயர்வு சாத்தியமில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால், விரைவில் விலையை உயர்த்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என மறுக்க முடியாது என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன. எனவே, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியது போல் எந்த நேரமும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 37 காசுகள் சரிந்து ரூ.95.19க்கு வர்த்தகமானது. இந்தநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அமெரிக்க அரசுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தால் தொழில்துறையினருக்கு பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா நிறுவன பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இவை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

* விறகு அடுப்பு தான் நிரந்தரம்
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் ஓட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன் மெனுக்களும் குறைக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க பெரும்பாலான ஓட்டல்கள் விறகு அடுப்புகளுக்கு தற்காலிகமாக மாறின. ஆனால் தற்போது சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இனி சிலிண்டரையே மறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், இனி நிரந்தரமாக விறகு அடுப்பை தான் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

* 5 கிலோ சிலிண்டர் 261 ரூபாய் உயர்வு: புலம்பெயர் தொழிலாளர் வயிற்றிலும் அடி
குறுகிய கால அவசர தேவைகளுக்காக 5 கிலோ எடை கொண்ட மினி சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதனை புலம்பெயர் தொழிலாளர்கள், சிறிய வெள்ளிப்பட்டறை நடத்துவோர் வாங்கி பயன்படுத்துகின்றனர். வர்த்தக சிலிண்டர் விலை ரூ.993 ஏற்றப்பட்டதை தொடர்ந்து 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் 261 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் வரை ரூ.595க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ சிலிண்டர் நேற்று முதல் ரூ.856க்கு விற்கப்படுகிறது. இதனால் மினிசிலிண்டர் வாங்கி பயன்படுத்தும் புலம்பெயர் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

* உணவுப்பொருட்கள் விலை 10 சதவீதம் உயரும் அபாயம்
சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது: அமெரிக்கா-ஈரான் போருக்கு முன் வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.1,850 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.3,200 என விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை மாதத்தில் ஒரு சிலிண்டருக்கு ரூ.1,350 வரை விலை கூடியுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் 15 சதவீதம் டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. சிறிய ஓட்டல்கள், கையேந்தி பவன் உள்ளிட்டவை வாரத்தில் 2 நாட்கள் செயல்படுவதில்லை. தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் பலர் ராக்கெட் அடுப்பு, விறகு அடுப்புக்கு மாறியுள்ளனர். தற்போது ராக்கெட் அடுப்புக்கும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் காய்ந்த விறகும் சரிவர கிடைப்பதில்லை. ஈரமாக கிடைப்பதால் தொழிலாளர்கள் வேலை செய்ய கஷ்டப்படுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு தொடர்பாக விரைவில் ஓட்டல் உரிமையாளர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவுள்ளோம். அதில் உணவுப்பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலை கூடினால் வாடிக்கையாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வருகை கணிசமாக குறையும். சிலிண்டர் விலை குறைந்து, சீரான முறையில் விநியோகம் செய்தால் இந்த பாதிப்பு ஏற்படாது. இல்லை என்றால் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Tags : Salem ,
× RELATED ஈரான் மீதான போர் விவகாரத்தில் 60 நாள்...