ஊட்டி: கோடை சீசனையொட்டி, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வழிப்பாதை திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை உட்பட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆண்டுதோறும் கோடை சீசனின்போது போக்குவரத்தில் மாற்றம் செய்வதுபோல இந்தாண்டும் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா கார்கள் அனைத்தும் காட்டேரி சந்திப்பிலிருந்து இடதுபுறமாக திரும்பி சேலாஸ், கெந்தளா, காட்டேரிடேம், கேத்தி பாலாடா, கொல்லிமலை, லவ்டேல் வந்து மஞ்சனக்கொரை, பர்ன்ஹில் வழியாக ஊட்டி நகருக்குள் வந்தடையலாம். மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் மற்றும் தெப்பக்காடு செல்லும் சுற்றுலா பேருந்துகள், வேன், கார்கள் மற்றும் மேக்சிகேப் வாகனங்கள் அனைத்தும் லவ்டேல் ஜங்ஷனிலிருந்து இடதுபுறமாக திரும்பி லவ்டேல் ரயில்வே ஸ்டேஷன், லவ்டேல் காவல் நிலைய சந்திப்பு, காந்திநகர், மஞ்சனக்கொரை, பர்ன்ஹில், காந்தள் முக்கோணம், பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் அனுப்பிவைக்கப்படும்.
குன்னூரிலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சுற்றுப் பேருந்தை (சர்க்யூட் பஸ்) பயன்படுத்திக்கொள்ளலாம். கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்து மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் அரசு கலைக்கல்லூரி தற்காலிக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சர்க்யூட் பஸ்சை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்லவேண்டும். ஒரு சில வாகனங்கள் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ், கட்டபெட்டு மற்றும் கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திருப்பிவிடப்படும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் பர்லியார் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. கூடலூரிலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து சுற்றுலா பேருந்துகள் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்பிஎப் கோல்ப் சாலைப் பகுதியில் நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு சர்க்யூட் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூடலூரிலிருந்து தலைக்குந்தா வந்தடையும் இலகுரக சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா மட்டம் கோழிப்பண்னை புதுமந்து வழியாக ஸ்டிபன்சர்ச் வந்தடையும். மே மாதம் 1ம் தேதி முதல் முதல் அத்தியாவசிய பொருட்கள் (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) ஏற்றிவரும் வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி இல்லை. இந்த ஒருவழிப்பாதை திட்டம் மே மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
