சென்னை: மே தின பேரணிகளின் தொழிலாளர் இயக்கங்களின் பங்கேற்பு வெகுவாக குறைந்து வருவதாக தொழிற்சங்கத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மே 1ம் தேதி தொழிலாளர்களின் உரிமைகளை நினைவூட்டும் நாளாகவும், அவர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி தொழிலாளர்கள் போராட்டங்களை நினைவூட்டும் வகையிலும், பாரம்பரியமாக கூடும் சில இடங்களில் சென்னையில் உள்ளது. ஜார்ஜ் டவுன் கலெக்டரேட் கட்டிடம், வியாசர்பாடி ரயில் நிலையம், ஜீவா பூங்காக்கள் மற்றும் மெரினா கடற்கரை போன்ற இடங்கள் சென்னையில் தொழிலாளர் இயக்கங்கள் கூடும் முக்கிய இடங்களாக உள்ளன. அதிலும் குறிப்பாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ‘தொழிலாளர் சிலை’ தொழிலாளர்களின் போராட்டங்களின் அடையாளமாக விளங்குகிறது.
இந்தியாவில் முதல் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தி வைத்த எம்.சிங்காரவேலர், தொழிலாளர் உரிமைகளுக்காக பாடுபட்ட முக்கிய தலைவராவார். அவர் 1923ம் ஆண்டு லேபர் கிசான் கட்சியை நிறுவி சிவப்பு கொடியை ஏற்றி தொழிலாளர் இயக்கத்தை முன்னெடுத்தார். அவரது சமாதி இன்றும் லேடி வில்லிங்டன் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ளது. ஆனால் ராயபுரத்தில் உள்ள அவரது நினைவிடம் பராமரிப்பு இன்றி உள்ளதாக தொழிலாளர் இயக்கங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஜீவா பூங்காக்கள், கம்யூனிஸ்ட் தலைவர் பி.ஜீவானந்தத்தின் தொழிலாளர்களுக்கு முன்னெடுத்த பங்களிப்பை நினைவூட்டுகின்றன.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா, ஆண்டுதோறும் மே தின கொண்டாட்டங்களின் மையமாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கூடுகின்றனர். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் இந்த பூங்கா, தொழிலாளர்களின் ஓய்வு இடமாகவும் பயன்படுகிறது. 1967 முதல் 1970 வரை சென்னையில் நடைபெற்ற மே தின பேரணிகள் மிகப்பெரிய திரளான மக்களின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய காலத்தில் தொழிலாளர் இயக்கங்களில் பங்கேற்பு குறைந்து வருகிறது. இதற்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் அதிகரிப்பு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என தொழிற்சங்கங்கள் கூறுகின்றனர்.
