×

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: மே தினம், சித்ரா பவுர்ணமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 2.13 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே தினம், சித்ரா பவுர்ணமி மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், தலைநகர் சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கத்தை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பேருந்து பயணத்தை மக்கள் அதிகளவில் தேர்ந்தெடுத்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் 2.13 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் கூறியதாவது: தொடர்விடுமுறையையொட்டி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்.30ம் தேதி முதல் நேற்று அதிகாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சிறப்புப் பேருந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Chennai ,Transport Corporation ,Chitra ,Pournami ,Tamil Nadu ,
× RELATED ஐசிஎஸ்இ, ஐஎஸ்சிஇ தேர்வுகளில் தமிழக மாணவர்கள் 99.9% தேர்ச்சி பெற்று சாதனை