வால்பாறை: வால்பாறை பகுதியில் காமராஜ் நகர் முதல் புதுத்தோட்டம் எஸ்டேட் வரை சிறுத்தை ‘ஜாலியாக’ நடமாடிய சம்பவம் தொழிலாளர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையில், காமராஜ் நகர் பகுதியில் இருந்து புதுத்தோட்டம் எஸ்டேட் வரை சாலையிலேயே சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. இப்பகுதியில் நேற்று சாலையில் தோன்றிய சிறுத்தை, மலைச்சாலையில் சில தூரம் நடந்தபடி நகர்ந்து பின்னர் எஸ்டேட் பகுதிக்குள் சென்றது. அந்த நேரத்தில் சென்ற வாகன ஓட்டிகள் இந்த காட்சியை தங்கள் செல்போன்களில் பதிவு செய்தனர்.
சமீப காலமாக வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் சுற்றித்திரிந்த காட்சிகள் வெளியாகி இருந்தது. மேலும், சோலையார் அணை அருகேயும் சிறுத்தை காணப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. வால்பாறை சுற்று வட்டாரம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளதால், வன விலங்குகள் சாலையில் நடமாடுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்ட சம்பவங்கள் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
