புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பசும்பொன் சாலையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு தற்போது பராமரிப்பு இல்லாமல் முட்செடிகள் வளர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், பாலாஜிநகர். ராம்நகர், ஜீவாநகர், கிராவல்மேடு ஆகிய பகுதி களில் யாராவது மரணமடைந்தால் அவர்களது சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. சுடுகாடு நுழைவாயில் பகுதியில் குப்பை மற்றும் முட்செடி வளர்ந்து, கால்களை பதம்பார்க்கின்றன. இதுகுறித்து அலமாதி ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த பிரச்னையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”எடப்பாளையம் சுடுகாடு ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்தது. நாளடை வில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அரை ஏக்கராக மாறியுள்ளது. சுடுகாடு பகுதியில் முட்செடி, குப்பை கொட்டப்படுவதாலும் மின்விளக்கு வசதி இல்லாததாலும் சிரமம் ஏற்படுகிறது. தண்ணீர் இல்லாததால் ஈமகாரியம் மற்றும் சடங்குகள் செய்ய முடியவில்லை. எனவே, அலமாதி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிற சுடுகாட்டியாவது பாதுகாத்து சுற்றுச்சுவர், மின்விளக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்திதர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
