வேலூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 107.6 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. ஆரம்பத்திலேயே 100 டிகிரியை கடந்த வெயில் பதிவானது.
காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்குவதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மாவட்டத்தில் மார்ச் மாதம் 3ம்தேதி 100.2 டிகிரியாக பதிவான வெயில் படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 7ம்தேதி 108 டிகிரியாக பதிவானது. தொடர்ந்து கடந்த 28 நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 107.6 டிகிரியாக வெயில் பதிவானது. வெயில் தாக்கம் காரணமாக சாலைகளில் கானல் நீர் காணப்பட்டது. அனல் காற்று வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் பிரதான சாலைகளில் கூட வாகனங்கள் குறைந்தளவே இயங்கின. மேலும் வீடுகளில் இருப்பவர்களும் பேன் இயங்கினாலும் வியர்வையில் நனைந்தனர். இரவில் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் தவித்தனர்.
