- மாமல்லபுரத்தில்
- தலசயன பெருமாள் கோயில்
- சித்திரை பிரம்மோத்ஸவ விழா
- துவஜ ரோகனம்
- கெடயம் பித்தாபாடு
- யாலி வாகனம்
- அனுமந்தா…
மாமல்லபுரம், மே 1: மாமல்லபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தலசயன பெருமாள் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா கோலாகலமாக துவங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் துவஜா ரோகணம், கேடயம் புறப்பாடு, யாளி வாகனம், அனுமந்த வாகனம், சேஷவாகனம், பல்லக்கில் நாச்சியார் திருக்கோலம், கருடசேவை, யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக தலசயன பெருமாள் 4 மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், சித்திரை பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தேவி – பூதேவி சமேதராக தலசயன பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என்று கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தென் மாடவீதி, மேற்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கிழக்கு ராஜவீதி வழியாக தேர்பவனி வந்து, மதியம் மீண்டும் கோயில் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி, ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில் காலை, மதியம் என ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் (பொ) செயல் அலுவலர் செல்வகுமார், கோயில் மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுந்தர வரதராஜ பெருமாள் தேவி பூதேவிகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து, 3ம் நாளான்று சுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, 7ம் நாளான நேற்று தேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட சுந்தர வரதராஜர் திருத்தேரில் அமர தோரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
தேரடி வீதியில் துவங்கிய தேரோட்டம் சின்ன நாராசம்பேட்டைத் தெரு, கருணீகர் தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, பஜார் வீதி, ராயர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் திருத்தேரினை கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து சாமியினை வழிபட்டனர். நிகழ்ச்சியையொட்டி, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு தரப்பினர்கள் மூலம் அன்னதானம், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பொதுக்குழு உறுப்பினர் பொன்.சசிகுமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். உத்திரமேரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
