×

சித்திரை பிரமோற்சவ விழாவையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

மாமல்லபுரம், ஏப்.25: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் 10 நாள் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் 30ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க அர்ஜூனன் தபசு சிற்பம் எதிரே நூற்றாண்டு பழமையான தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் சித்திரை பிரமோற்சவ விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இக்கோயிலில் இந்தாண்டு 10 நாள் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் மிக கோலாகலமாகத் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மூலவர் தலசயன பெருமாள் உள்பட பல்வேறு சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் மகா தீபாராதனை நடந்தது. இதன் தொடர்ச்சியாக, நாள்தோறும் அபிஷேக அலங்காரங்களுடன் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலாவும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வரும் 27ம் அம்ச வாகனமும், 28ம் தேதி கருடசேவையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, இக்கோயிலில் வரும் 29ம் தேதி யானை வாகன புறப்பாடும், 30ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. மேலும், வரும் மே 2ம் தேதி கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள தெப்பகுளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், 3ம் தேதி திருவாய்மொழி சாற்றுமுறை மற்றும் கேடய புறப்பாடும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை தலசயன பெருமாள் கோயில் நிர்வாகத்தினரும் கோயில் பட்டாச்சாரியார்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : Thalasayana Perumal Temple ,Chithirai Brahmotsava festival ,Mamallapuram ,-day Chithirai Brahmotsava festival of Mamallapuram Thalasayana Perumal Temple ,Arjuna ,Thalasayana… ,
× RELATED சித்திரை பிரமோற்சவ விழாவையொட்டி...