சென்னை: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 08.04.2026 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில்வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 6, 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள்: 06.05.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற 07.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் மாணவர்களுக்கும், 08.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் மாணவிகளுக்கும் கீழ்காணும் விவரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
காலை 7.00 மணி முதல் 07.05.2026 அன்று மாணவர்களுக்கான போட்டிகளும் மற்றும் 08.05.2026 அன்று மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (மாணவர்கள்), கைப்பந்து, ஆகிய மாவட்ட அளவிலான போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அந்தந்த மாவட்ட விளையாட்டரங்கங்களில் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாவட்ட அளவிலான தேர்வுகளுடன் கூடுதலாக, குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான நேரடி மாநில அளவிலான தேர்வுகள் 12.05.2026 அன்று காலை 7:00 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கின்றது. அந்த வகையில், சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வாள்வீச்சு, ஜூடோ மற்றும் குத்துச்சண்டை (மாணவர்கள்) போட்டிகளும், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை (மாணவிகள்) மற்றும் ஸ்குவாஷ் (மாணவர்கள்) போட்டிகளும் நடைபெறும். தஞ்சாவூர் அன்னை சத்யா மைதானத்தில் பளுதூக்குதல், திருச்சி அண்ணா மைதானத்தில் வுஷூ (மாணவர்கள்), சென்னை வேளச்சேரி AGB வளாகத்தில் நீச்சல், கடலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்தம் (மாணவர்கள்), கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் டேக்வாண்டோ மற்றும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்லர்கம்பம் ஆகிய போட்டிகளும் நடைபெறும்.
தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதி, பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். விருப்பமுள்ள அனைவரும் விளையாட்டு விடுதி தேர்வு போட்டியில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
