×

பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ

*கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை திணறல்

*1000 ஹெக்டேருக்கு மேல் எரிந்து நாசம்

*காட்டுத் தீ ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை

ஊட்டி : 13வது நாளாக பார்சன்ஸ்வேலி அணை பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். பைக்காரா வனப்பகுதிக்கு பரவியுள்ள நிலையில் சுமார் 1000 ஹெக்டேருக்கு மேல் எரிந்து நாசமாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு, கோடை வெயிலின் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. புல்வெளிகள் மற்றும் புதர்கள் பசுமை இழந்து காய்ந்து உள்ளன. இதனால் காட்டுத்தீ அபாயம் நீடித்து வந்தது. இந்நிலையில், நீலகிரி வன கோட்டத்துக்கு உட்பட்ட பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் கடந்த 15ம் தேதியில் இருந்து காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

வனம் நன்கு காய்ந்து இருந்த நிலையில் தீ மள மளவென பரவியது. உள்ளூர் வனத்துறையினர் அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், கோவை, திண்டுக்கல், கரூர், தர்மபுாி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த வனத்துறையினர் என சுமார் 400க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 7 மாநில வனத்தீ தடுப்பு வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிளை முடுக்கி விடப்பட்டுள்ளன. இவற்றுடன், மாநில பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்களும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் 5 குழுக்களும் தீயணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினருக்கு உதவியாக உள்ளூர் சூழல் மேம்பாட்டுக்குழுவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நபர்களும் களப்பணியில்இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக, தீ வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகம் மூலம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் ஹெலிகாப்டர் உதவி கோரியது.

அதன் அடிப்படையில், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 25ம் தேதி ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவும் நிலையில், அதனை கட்டுபடுத்துவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக மாறியது.

மேலும், ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைப்பதிலும் இடர்பாடு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் தீ எரியும் இடத்தை சரியாக கணித்து தண்ணீரை தெளிக்க முடியாது என்பதால் அந்த பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 13 நாட்களாக எரியும் காட்டுத் தீயில் சுமார் 1000 ஹெக்டேருக்கும் மேல் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.

தற்போது காட்டுத் தீ பைக்காரா பகுதிக்கு பரவியுள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பார்சன்ஸ் வேலி, பைக்காரா பகுதியிலும் பல இடங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஓராண்டில் நீலகிரி மாவட்டத்தில் புலிகள் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த நிலையில் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதற்கு பழிவாங்க மக்களால் இந்த தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிலர் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் புற்கள் மீண்டும் வளர்வதற்கு ஏதுவாக, காய்ந்த புற்களை அகற்றும் நோக்கில் கால்நடை மேய்ப்பவர்களே தீ வைத்திருக்கலாம்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வனத்தீ ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம். இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Baikara ,Parnsvale ,Parnsvale Dam ,
× RELATED விழாக்கோலம் பூண்டது மதுரை: இனிதே...