×

மின் மோட்டார் சீரமைக்க இறங்கியபோது கிணற்றில் விழுந்து தவித்த முதியவர்

*தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே மின் மோட்டார் சீர்மைக்க 100 ஆழ கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்த முதியவரை நேற்று தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள மகமதுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(64), விவசாயி.

இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், நேற்று நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார் ஆன் செய்தார். அப்போது மோட்டார் இயங்கவில்லை. இதனால், பாலசுப்பிரமணி, சுமார் 100 ஆழமுள்ள கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சீரமைத்தார்.

பின்னர், கிணற்றில் இருந்து மீண்டும் மேலே ஏற முயன்றபோது, கால் தவறி கிணற்றில் விழுந்து அலறி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது முதியவர் கிணற்றில் விழுந்து தத்தலித்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், முதியவரை மீட்க முயன்றும் முடியாததால், ஒடுகத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) மகேந்திரன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் விழுந்த முதியவரை, சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். மேலும், கிணற்றில் தவறி விழுந்த முதியவருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.

Tags : Odugathur ,Balasubramani ,Mahamadhupuram ,Vellore district ,
× RELATED மாயமான காதல் ஜோடி காவல் நிலையத்தில்...