- மெரினா கலங்கரை விளக்கம்
- அதிகாரமுள்ள
- பனகல் பூங்கா
- பூந்தமல்லி பாதை
- சென்னை
- சென்னை மெட்ரோ
- மெட்ரோ ரெயில் கம்பனி
- கோடம்பாக்கம் பவர் ஹவுஸ்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரையிலான வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகளை வரும் ஜூலை மாதம் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் பூந்தமல்லி- போரூர், போரூர் – வடபழனி வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி – போரூர் வரையிலான தடத்தில் மெட்ரோ ரயில் மற்றும் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனையை இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் குழுவினர் கடந்த ஆண்டு ஆக.16 முதல் ஒரு வாரத்துக்கு மேல் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர், பூந்தமல்லி – வடபழனி இடையே அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். அப்போது, மெட்ரோ ரயிலை மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதித்தனர். மேலும், சிக்னல் அமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.பூந்தமல்லி மெட்ரோ நிலையம் போரூர் சந்திப்பு வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்க மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். இதில் 10 நிலையங்கள் உள்ளன. போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஒரு நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பனகல் பூங்கா வரை தண்டவாள பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த 2.9 கி.மீ தூரத்திற்கு, இருபுறமும் சேர்த்து மொத்தம் 5.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன.தற்போது மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை நோக்கம், பூந்தமல்லி – போரூர் – வடபழனி இடையிலான உயர் மட்டப் பாதையை முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதாகும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 2027க்குள் இந்த பாதையை பனகல் பூங்கா வரை நீட்டிக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பூந்தமல்லியில் இருந்து உயர்மட்ட பாதையாக வரும் மெட்ரோ ரயில், பனகல் பூங்காவில் தான் சுரங்கப்பாதைக்குள் நுழைகிறது. 2ம் கட்ட திட்டத்தில் பயணிகள் பயன்படுத்தப்போகும் முதல் சுரங்கப்பாதை நிலையமாக பனகல் பூங்கா அமைய உள்ளது.இந்த இடைப்பட்ட தூரத்தில் வெறும் 3 நிலையங்கள் மட்டுமே இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் சவாலான பகுதியாகும். தண்டவாளம் அமைக்கும் பணிகளுடன் சேர்த்து, ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மேல்நிலை மின்சாரக் கம்பிகள் அமைக்கும் பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட உள்ளன. இதற்காகத் தேவையான தண்டவாளங்கள் மற்றும் பிற தளவாட பொருட்கள் ஏற்கனவே அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தண்டவாளம் அமைக்கும் பணியை விட, பனகல் பூங்கா சுரங்கப்பாதை நிலையத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிப்பதே தற்போதைய பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையத்தில் சுமார் 5 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றை 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடித்தால் மட்டுமே, ரயில்களைத் தடையின்றி இயக்க முடியும். எனவே, நிலைய கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது, தி.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பயனடைவார்கள். பனகல் பூங்கா நிலையம் செயல்பாட்டிற்கு வருவதன் மூலம், பயணிகள் 2ம் கட்ட மெட்ரோ பாதையிலிருந்து முதல் கட்ட மெட்ரோ பாதையுடன் எளிதாக இணைந்துகொள்ள முடியும். இது சென்னையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்வோருக்குப் பயண நேரத்தை வெகுவாக குறைக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்த சிறு வழித்தட பணிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதால், சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேடு முதல் சென்னை வர்த்தக மையம் வரையிலான 5வது வழித்தடப் பணிகளும் இதனுடன் இணையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
