×

மணலி ஏரி படகு குழாமை சுற்றி ரூ.4.35 கோடியில் நடைபாதை பணி: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

மணலி: திருவொற்றியூர் தொகுதி, மணலி மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள மணலி ஏரியை தூர்வாரி சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையின் பேரில், ரூ.8 கோடி செலவில் ஏரியை தூர்வாரி புனரமைத்து சிறுவர் விளையாட்டு பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி, நவீன கழிவறை மற்றும் உணவகங்கள் இவற்றுடன் படகு குழாம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி 13ம் தேதி படகு சவாரி துவக்கி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஏரியை சுற்றி மின் விளக்குகள், இருக்கை வசதிகள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. மணலி ஏரியில் ஏற்கனவே 1.8 கிலோ மீட்டர் நீள நடைபாதை உள்ளது. இந்த பணிகளில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. சரளைக்கல் பதிக்கும் பணி மட்டுமே மீதமுள்ளது. மேலும், மணலி ஏரியில் சுற்றுச்சுவர் கட்டுதல், மேடை அமைத்தல் மற்றும் பிற மேம்பாட்டு பணிகள் சுமார் ₹11.75 கோடியில் நடைபெற உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, நீர்வரத்து கால்வாய்களில் ஷட்டர் கேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், வறண்ட காலங்களில் கூட ஏரிகள் சுத்தமாக இருக்கும். மணலி ஏரியில் இருந்து உபரி நீர் புழல் உபரி கால்வாய்க்கு செல்கிறது.

இந்தநிலையில் மணலி ஏரியை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4.35 கோடி செலவில் நடைபாதை, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மணலி மண்டல உதவிஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளின் கட்டமைப்பு மற்றும் தரம் குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்து விரைவாக பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Tags : Manali ,Lake ,Boat Launching Ceremony ,Manali Lake ,Kamaraj Salai ,Thiruvottiyur block ,Manali Mandal ,
× RELATED 28ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்:...