×

2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை: மொடக்குறிச்சி, சென்னையில் இன்று ரோடு ஷோ

சென்னை: இரண்டு நாள் பயணமாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்தார். இன்று அவர் ஈரோடு, சென்னையில் “ரோடு ஷோ” நடத்துகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜ தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். கடந்த 15ம் தேதி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பிரதமரை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 10 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். அங்கு பாஜ மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு விடுதியில் இருந்து புறப்படும் அவர், கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் தாமரைப்பாளையம் சென்றடைகிறார். அங்கிருந்து காலை 10 மணிக்கு சிவகிரி செல்லும் அமித் ஷா, மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுமார் ஒரு மணி நேரம் ரோடு ஷோவில் ஈடுபடுகிறார். ஈரோடு பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் கோவை வரும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜ தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகிலிருந்து தொடங்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் அமித் ஷா பங்கேற்கிறார்.

மயிலாப்பூர் வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார். மாலை 6 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் கிண்டி விடுதிக்குச் சென்று பாஜ மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து பாஜ மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால் அரசியல் களம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags : Home Minister ,Amitsha Tamil Nagar ,Today Road Show ,Modakurichi, Chennai ,Chennai ,Union Minister ,Amitsha ,Tamil Nadu ,Road Show ,Erode, Chennai ,BAJA NATIONAL LEADERS ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,ADAMUGA ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை...