அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிறந்து, பெங்களூருவில் வளர்ந்தவர் ஸ்ரீலீலா. கடந்த 2019ம் ஆண்டு ‘கிஸ்’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தனது நடனம் மற்றும் துறுதுறு நடிப்பால் கவனத்தை ஈர்த்து வரும் அவர் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்த அவர், தற்போது தனுஷின் 55வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ரீலீலா, பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தேன். தற்போது மருத்துவ படிப்பில் இன்டர்னாக இருக்கிறேன்.
மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்வேன். சினிமாவிலும், வாழ்க்கையிலும் நான் ஜெயிக்க எனது தாய்தான் காரணம். அவர் எப்போதும் எனக்கு வலிமையாக இருக்கிறார். எனது ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவரது ஆதரவு இருக்கிறது. எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா முக்கியமானவர். என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால், அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் நயன்தாரா அக்கா மட்டுமே. அவர்தான் எனது ரோல் மாடல். சென்னை இளைஞர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைக்கும் தோசை எனக்கு மிகவும் பிடித்த உணவு. நயன்தாரா மாதிரி சென்னையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வேனா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது’ என்றார்.
