கொச்சி: கேரளாவிலுள்ள ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்து, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் தமிழ் வெப்தொடர் ஒன்றில் நடிக்க அனுக்கிரஹா எஸ்.நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு வருட கால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக அவருக்கு எந்த வேலையும், ஊதியமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய அனுக்கிரஹா, உணவின்றி தவித்தது மட்டுமின்றி, தீவிர மன உளைச்சல் காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து, பிறகு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அனுக்கிரஹா கூறுகையில், ‘எனது கனவுகளை பயன்படுத்தி என்னை முடக்கிவிட்டனர். வேறு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஒப்பந்தத்தை காரணம் காட்டி, என்னை நடிக்க விடாமல் தடுத்துவிட்டனர். வளரும் கலைஞர்களை இதுபோல் நடத்தக்கூடாது’ என்று கண்ணீர் வடித்தார். இந்த விவகாரத்தில் நடிகரும், இயக்குனருமான விஜய்குமார் ராஜேந்திரன், அவரது மனைவி நட்சத்திரா மூர்த்தி ஆகியோர் மீது கடுமையான புகார்களை அனுக்கிரஹா முன்வைத்துள்ளார்.
அதில், ‘எனது உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட பிறகும் கூட விஜய்குமார் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார். அவரது மனைவி தனது தோழிக்கு அனுப்பிய ஆடியோ செய்தியில், என்னை மிகவும் இழிவாக பேசியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அனுக்கிரஹா வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள தனக்கு போதிய வசதி இல்லாததால், சமூக வலைத்தளங்களின் மூலம் தனக்கான நீதியை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
