மதுராந்தகம்: செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலி இடையே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட வருடங்களாக பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தென் இந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படும் பாலாறு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. இந்த பாலாறு, கர்நாடகாவில் 93 கிமீ தொலைவு, ஆந்திராவில் 33 கி.மீ., தூரம் பாய்ந்து, வாணியம்படி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக அளவாக 222 கி.மீ., தூரம் பயணித்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வாயலூர் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகியவை பாலாற்றினால் பயன்பெறுகின்றன. பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரமாகும். இதனால் விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 50 ஆண்டுகால கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை திருக்கழுக்குன்றம் அருகே வள்ளிபுரம், கல்பாக்கம் அருகே வாயலூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தடுப்பணை உள்ளது. செங்கல்பட்டு பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு எங்கும் தடுப்பணை அமைக்கப்படவில்லை.
எனவே, செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலிக்கும் இடையே தடுப்பணை கட்டினால் சுற்றியுள்ள திம்மாவரம், ஆத்தூர், தேவனூர், பாலூர், காவூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம், தேவனூர், சாத்தணஞ்சேரி, மெய்யூர், பினாயூர், மாமண்டூர் என 50 கிராம விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், பாலாற்றில் தடுப்பணை கட்டினால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மூன்று போகமும் விவசாயம் நடைபெறும். அதேபோல், ஏக்கருக்கு 40 முதல் 45 மூட்டைகள் வரை நெல் அறுவடை செய்யலாம், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வெள்ளம் பாலாறு வழியாக சென்று வீணாக கடலில் கலக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு பாலாறு வறண்டு காணப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு சுற்று வட்டார விவசாயிகளின் 50 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழித்துக் கொள்ளுமா நீர்வளத்துறை?
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நிலவி வருகிறது. ஆனால் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு சற்று குறைவாக தான் உள்ளது. மூன்றாவதாக ஒரு தடுப்பணை செங்கல்பட்டு அருகே மெய்யூர் பகுதியில் அமைக்க நீர்வளத்துறை இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுமா? என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் செழித்தோங்கும்
மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் கூறுகையில், ‘மெய்யூருக்கும், பழவேலிக்கும் இடையே பாலாற்றில் தடுப்பணை அமைத்தால் பழமதுரான் கால்வாய் மாமண்டூர், பழமத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள நான்கு ஏரிகளுக்கும் குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் விவசாயமும் செழித்தோங்கும்’ என்றார்.
