*ஆற்றங்கரையில் முன்னோருக்கு திதி ஏற்பாடு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உள்ள கோயில்களில் நேற்று, ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆழியாற்றங்கரையில் ஏராளமானோர், முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனை தரிசிக்க ஏற்ற மாதமான ஆடியையொட்டி இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம்.
அதிகளவில் இருக்கும். இதில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள். கோயில் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனாக பட்டுப்புடவைகளை அம்மனுக்கு சாத்தினர். காலை முதல் இரவு வரை சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலைக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுபோல, பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில், பயாஸ்கோப் வீதி சவுடம்மன் கோயில், மரப்பேட்டைவீதி பிளாக் மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோயில்களிலும், சூலக்கல் மாரியம்மன் கோயில், ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோயில், தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேலும், ஆடிப்பெருக்கையொட்டி ஆழியாற்றங்கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு திதி கொடுத்தும், பெண்கள் புது தாலி கட்டியும் வழிபட்டனர். இதனால் ஆழியாற்றங்கரையில் நேற்று, ஆங்காங்கே கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் ஆழியாற்றங்கரை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
