*பண்ணை விலை தொடர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் இளநீரின் விலை தொடர்ந்து உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவைக்கு அதிக கிராக்கி உள்ளது.
இதில், இந்த ஆண்டில் மே மாதம் துவக்கம் வரையிலும் கோடை வெயிலின் தாக்கத்தின் போது, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இளநீர் அதிகளவு அனுப்பப்பட்டது. பொள்ளாச்சி இளநீருக்கு அதிக கிராக்கியால் தோட்டங்களில் நேரடி விலையாக, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒரு இளநீர் ரூ.52 வரை, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
கடந்த மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்திருந்தாலும், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் உற்பத்தி குறைவால், வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதனால், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து அனுப்பப்படும். இளநீர் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்த வாரத்திலும் நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ரூ.52 வரை விற்பனையாகியுள்ளது.
தமிழகத்திலும் கர்நாடக பகுதியிலும் அடிக்கடி மழை பெய்தும், பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் இளநீருக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இளநீர் விலை குறையாமல் இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
