நீலகிரியில் மீண்டும் காலநிலையில் மாற்றம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவக்கம்

 

ஊட்டி,ஆக.4: நீலகிரியில் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய துவங்கியுள்ளது. மழை பெய்ய வேண்டிய விவசாயிகள் வருண பகவானை வேண்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது.ஆனால் இந்த மழை தொடர்ந்து நீடிக்கவில்லை. அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இரு மாதங்களுக்கு மேலாக கன மழை பெய்யாமல் பருவ மழை போக்கு கட்டி வருகிறது. நாள்தோறும் கோடை காலம் போல் வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில்,மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரித்தது. இந்த மழை மூன்று நாட்கள் தொடரும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போல் கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யவில்லை.

அதே சமயம் கடந்த இரு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேக மூட்டம் மற்றும் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் சில மணி நேரம் மழை பெய்தது. ஆனால் இந்த மழை தொடரவில்லை. கனமழையும் பெய்யவில்லை. நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் தற்போது மழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. ஊட்டியில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடர வேண்டுமென பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருண பகவானை வேண்டி வருகின்றனர். இந்த மழை தொடரவில்லை எனில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது.

Related Stories: