மேலூர்: மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில், 2 கார்கள், டூவீலர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தாய், மகன்கள், மருமகள் உட்பட 5 பேர் பலியாயினர். தந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். சென்னை பாடிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராம் (32). இவர், மனைவி ரஞ்சனா(30), குழந்தை பிரணிகா(3), தந்தை கனகராஜ்(54), தாய் ராஜகுமாரி (52), தம்பி பாலாஜி (28) ஆகியோருடன் காரில் திருநெல்வேலியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றார்.
காரை ஸ்ரீராம் ஓட்டிச் சென்றார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னே சென்ற டூவீலர் மீது கார், எதிர்பாராவிதமாக மோதியது, இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் ஏறி மறுபுறம் உள்ள சாலையில் சென்றது. அப்போது மதுரையில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில், சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணித்த ஸ்ரீராம், ரஞ்சனா, குழந்தை பிரணிகா, தாய் ராஜகுமாரி, தம்பி பாலாஜி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமின் தந்தை கனகராஜ் படுகாயம் அடைந்தார். அவரும், மற்றொரு காரில் மதுரையை சேர்ந்த பிரகாஷ், டூவீலரில் சென்ற எஸ்.வி.மங்கலம் முருகன் மற்றொரு முருகன் உட்பட 5 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
* 15 நாளில் 2வது சம்பவம் 3 மாதத்தில் 15 பேர் பலி
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே சாலையில் வஞ்சிநகரம் அருகே ஆம்னி பஸ் ஒன்று அரசு பஸ் மீது மோதியதில் 6 பேர் பலியாகினர். கடந்த 3 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் நடந்த விபத்துகளில் 15 பேர் வரை பலியானது குறிப்பிடத்தக்கது.
