சென்னை: பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதை எதிர்த்தும் இந்த வழக்கில் கைதான வெள்ளத்துரை, சேதிபதி ஆகியோர் ஜாமீன் கோரியும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இந்த விவகாரத்தில் பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோரை சேர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. அதேநேரத்தில் பத்திரப்பதிவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, நிலுவையில் இருக்கும் உரிமையியல் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு பின்னர் தான் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறி இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
