×

பாப்பாரப்பட்டியில் நீரின்றி காய்ந்து கருகி வரும் நிலக்கடலை பயிர்

*இழப்பீடு வழங்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

பாப்பாரப்பட்டி : பாப்பாரப்பட்டியில், நீரின்றி காய்ந்து வரும் நிலக்கடலை பயிரால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் தித்தியோப்பன அள்ளி ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலமரத்துப்பட்டி, பொன்னேரி, காந்திபுரம், திகிலோடு ஆகிய கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில், நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் பருவமழை பெய்யாத சூழ்நிலையில், மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.

ஆனாலும், சொட்டுநீர் பாசனம் மூலம், விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். தொடர்ந்து மழை பொய்த்துப் போன நிலையில், கிணற்றில் தண்ணீர் குறைந்ததால் சொட்டுநீரப்பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள், தங்கள் நிலத்தில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது.

நிலக்கடலை சாகுபடி செய்ய விதைப்பு, உரம், களை எடுக்க என இடுபொருட்கள் என ஏராளமான செலவு செய்துள்ள நிலையில், நிலக்கடலை பயிர் காய்ந்து போனால் நஷ்டம் ஏற்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `பருவமழை பொய்த்த நிலையில், மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுகிறது.

நீரின்றி கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சோளம், ராகி மற்றும் நிலக்கடலை பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால், நாங்கள் லட்சகணக்கில் நஷ்டம் அடைந்து வருகிறோம். அதிக முதலீடு செய்து தற்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே, அரசு இழப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Papparapatti ,Thittiyopana Alli panchayat ,Dharmapuri district ,Alamarathupatti ,Ponneri ,Gandhipuram ,Thikilodu ,
× RELATED பழனி கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2...