×

கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முனையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.

இந்த காட்சி முனையை கண்டு ரசிக்க தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.

இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

அதேபோல் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று கொடநாடு காட்சிமுனைக்கு வந்தனர். கொடநாடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக குளுகுளு காலநிலை நிலவியது.

அப்போது தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவில் உருவான அடர்ந்த வெண் படலம் சூழ்ந்த அடர்ந்த மேகமூட்டங்கள் மலைகளின் மீது தவழ்ந்து செல்வதை சுற்றுலா பயணிகள் மெய் மறந்து வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்த ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Kodanadu ,Kotagiri ,Kodanadu Scenic Point ,Neelgiri district ,Nilgiri district ,
× RELATED ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் வன்னிஅரசு