×

மேய்ச்சல் நிலம் காய்ந்தது: தீவனங்கள் விலையேற்றம் குண்டடம் மாட்டுச்சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரிப்பு

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் மாட்டுச்சந்தைக்கு இந்த வாரம் மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விற்பனையில் மந்த நிலை நிலவியது.
திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும் குண்டடம் மாட்டுச்சந்தைக்கு குண்டடம், தாராபுரம், ஊதியூர், குடிமங்கலம், பெரியபட்டி, ஜல்லிபட்டி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மாடு வளர்ப்போர் விற்பனைக்காக கால்நடைகளை கொண்டு வருகின்றனர்.

மாடுகளை வாங்குவதற்காக பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், ஊட்டி, கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.நேற்று நடைபெற்ற சந்தைக்கு கன்றுகள், கறவை மாடுகள் உட்பட சுமார் 1500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்த போதும், விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை.கடந்த வாரங்களில் ரூ.70 ஆயிரம் விற்ற கறவை மாடுகள் இவ்வாரம் ரூ.60 ஆயிரத்துக்கும், ரூ.25ஆயிரத்துக்கு விற்ற வளர்ப்புக் கன்றுகள் ரூ.20ஆயிரத்துக்கும், காளை கன்றுகள் ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் மேய்ச்சல் நிலங்களில் போதிய மேய்ச்சல் இன்றி போனதால் விவசாயிகள் மாடுகளைக் குறைக்கத் தொடங்கி விட்டனர்.

தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மழை இல்லாததால் வைகோல்களும் கிடைப்பதில்லை.இதனால் மாடுகளை பராமரிக்க மிகவும் சிரமப்பட வேண்டி உள்ள நிலையில் கறவை மாடுகள், காளை மாடுகளை அதிகளவில் வைத்து பராமரிக்க கட்டுப்படியாகாது.

முறையான கலப்பு தீவனம் கறவை மாடுகளுக்கு கொடுத்தால் மட்டுமே பால் உற்பத்தி ஓரளவுக்கு கைகொடுத்து வந்தது தற்போது தீவனங்களும் விலை உயர்ந்து விட்டதால்,மாடுகளை வைத்து எப்படி வளர்க்க முடியும் இதனால் வீட்டுக்கு தேவைக்கு தகுந்தார் போல் ஒன்று அல்லது இரண்டு மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற மாடுகள் காளைகள் அதன் கன்றுகளை விற்பனை செய்து வருகிறோம்.உரிய நேரத்தில் மழை பெய்திருந்தாலோ, அமராவதி ஆயகட்டுக்கு முறையாக தண்ணீர் கிடைத்து இருந்தாலோ இது போன்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்காது எனக் கூறினர்.

Tags : Kundadam ,market ,Tarapuram ,Kundadam cattle market ,Tiruppur district ,Udzhiyur ,Kudimangalam ,Periyapatti ,Jallipatti ,Kangayam… ,
× RELATED ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் வன்னிஅரசு