சேலம், ஆக. 3: சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை வழங்க, 23 இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள், அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதற்கு ஏதுவாக, விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் முழுமையாக கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் விழுதுகள் ஒருங்கிணைந்த துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது, 23 இடங்களில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவில் 4 விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் 23 துணை ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி தற்போது, 3 விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் 20 துணை ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதர இடங்களில் விரைவில் தொடங்கப்படும். இம்மையங்களில் தசைப் பயிற்சியாளர், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர், கண் பரிசோதகர், மனநல ஆலோசகர், சிறப்பாசிரியர் மற்றும் தொழிற்முறை பயிற்சியாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் தனிநபர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு தேவையான பயிற்சி வழங்குதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை எளிதாக ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில் இம்மையங்கள் செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான 4 வகையான மறுவாழ்வு சேவைகள், அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் தேவைகளை கண்டறிந்து தேவையான மறுவாழ்வு சேவைகள் கிடைத்திட வழிகாட்டி வருகின்றனர். கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், தரமான மறுவாழ்வு சேவைகள் வழங்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் நோக்கமாகும். இதுகுறித்து மேலும் தகவல் அறிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அருகாமையில் உள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை நேரிலும் அல்லது இலவச உதவி எண் 18004250111 மற்றும் சைகை மொழியில் தொடர்பு கொள்ள (வாட்ஸ்அப்) 94983 45350 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
