நாமக்கல், ஜூலை 31: நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், விரைவில் அவசர சிகிச்சை பிரிவு செயல்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால், பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வெட்டும் பருவத்தில் உள்ள கரும்புகளை உடனடியாக விவசாயிகள் வெட்டி கொடுத்தால், அதை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் வாங்க உத்தரவிடவேண்டும். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 800 கிலோ பித்தளை, செம்பு காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக 6 பேரை சர்க்கரை ஆலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
காவல்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தனியார் மூலம் நடத்தப்படுகிறது. டீசல் பிடிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை ஆலை நிர்வாகமே பணியாளர்களை நியமித்து பங்க்கை நடத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த கலெக்டர் மதுபாலன், இது பற்றி சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர், விசாரணை நடத்தி வருகிறார். வரும் 10ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அளிப்பார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்க்கில் நடைபெறும் தவறுகளை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தான், எனது கவனத்திற்கு இந்த பிரச்னை வந்துள்ளது என்றார்.
விவசாயி சேகர் பேசுகையில், கொசவம்பட்டி ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் மதுபாலன் பேசியதாவது: நாமக்கல்-மோகனூர் ரோடு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், அவசர சிகிச்சை பிரிவு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசாணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அவசர சிகிச்சை பிரிவு தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும். மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை 182.63 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முடிய இயல்பு மழையளவு 223.77 மி.மீ. இயல்பைவிட விட 41.15 மி.மீ குறைவான மழைபொழிவு பெறப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன், ஆர்டிஓ.,க்கள் சாந்தி, லெனின், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மரியாதையை இழந்து பேச விரும்பவில்லை -மாநில தலைவர் ஆவேசம்
குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளை பேச அழைப்பதில் குளறுபடி ஏற்பட்டது. தாமதமாக 11 மணிக்கு மேல் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், ஒரு சில விவசாயிகள் மட்டும் பேசிய நிலையில் மணி 12.30 ஆனதால், கூட்டம் முடிந்து விட்டது என கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமசந்திரன் கூறி விட்டு, கலெக்டர் மனு வாங்குவார் என அறிவித்தார். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து, தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து கலெக்டர் மதுபாலன், மனு வாங்குவதை நிறுத்தி விட்டு, விவசாயிகளை பேச அழைத்தார். அப்போது பேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம், `மரியாதையை இழந்து இந்த கூட்டத்தில் நான் பேசவேண்டிய அவசியம் இல்லை. கூட்டத்தை எப்படி நடத்துவது என்று நேர்முக உதவியாளருக்கு தெரியவில்லை.
முதலில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதன்பின் விவசாயிகள் பேசவேண்டும். அதன் பிறகு தான் மனுக்கள் வாங்க வேண்டும். இது பற்றி அரசாணையை நான் கொடுத்தும், என்னை பேச அனுமதிப்பதில்லை. எனது வயதை கருத்தில் கொண்டு, இதற்கு முன்பிருந்த மாவட்ட கலெக்டர்கள், என்னை கூட்டத்திற்கு வரவேண்டாம். கோரிக்கையை போனில் சொன்னால் போதும் என கூறினார்கள். ஆனால் இன்று, என்னை பேச அழைக்கவே இல்லை. நான் எனது மரியாதையை இழக்க விரும்பவில்லை,’ என்றார். அவரது பேச்சை கேட்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் கூறுகையில், விவசாயிகள் அனைவரும் பேசவேண்டும் என்பது தான் எனது விருப்பம். உங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி கொண்டு, யார் முதலில் பேசவேண்டும் என முடிவு செய்து, ஒவ்வொருவரும் 3 நிமிடம் மட்டும் பேசினால் கூட அனைவரும் பேச முடியும்,’ என்றார்.
