×

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.மோகனா திடீர் விலகல்: புதிய அமர்வுக்கு விசாரணை மாற்றம்

 

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் இருக்கும் முக்கிய பிரச்னையே செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பதுதான். ஏனென்றால் இந்த வழக்கில் 2000 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் விசாரணையை தொடங்கவே முடியாத சூழ்நிலை உள்ளது. எந்தவொரு சாட்சியிடமும் குறுக்கு விசாரணை நடத்த முடியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு அறிவுறுத்தலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அப்போது குறுக்கிட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா, ‘‘இந்த வழக்கில் புதிதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று கூடுதலாக ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரும் நியமனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதுபோன்ற நிலையில் நீதிபதி வி.மோகனா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,‘‘நான் வழக்கறிஞராக பணியாற்றிய போது மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதங்களை முன்வைத்துள்ளேன். எனவே தொழில்முறை தர்மத்தின் அடிப்படையில் வழக்கிலிருந்து விலகுகிறேன். இது தான் சரியான ஒன்றாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை புதிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை ஒத்திவைத்தார்.

* செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டுள்ளர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனு நேற்று தாக்கல் செய்தது.

Tags : Senthil Balaji ,Supreme Court ,Judge ,V. Mohana ,Chennai ,AIADMK ,Senthil Balaji… ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு