×

வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

 

சென்னை: வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்புள்ள 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து தமிழக அரசு 2023ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு அமர்வு, பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெருவெளியில் நூறு கோடி ரூபாய் செலவில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 71.24 ஏக்கர் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பலாம் என்று உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Vallalar ,Sathya Gnanasabha ,Peruveli ,Department of Charities ,Court ,Chennai ,Tamil Nadu government ,Vallalar International Center ,Vallalar Deiva Nilayam ,Vadalur ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு