தீவிரமடையும் பருவமழை: தமிழகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டெல்லி: பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மழை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக எந்த மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும், எங்கு நிலச்சரிவு ஏற்படும், எந்த பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு உருவாகும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வரும்போது இயற்கையின் கோரத் தாண்டவம் எப்படி இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்படுவது வழக்கம். இதனால், தங்களது வாகனங்களை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி சேமித்து வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடத் தொடங்குவார்கள்.

ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே பருவமழை தனது தீவிரத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் மிகக் கடுமையாக பெய்து வரும் மழை, தற்போது தென்னிந்திய மாநிலங்களையும் படிப்படியாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மழை நிலவரம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் விதர்பா பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்தியாவில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் 29-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மிகக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே, ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: