கலசப்பாக்கம் அருகே பரபரப்பு மூதாட்டி வீட்டின் கதவு உடைத்து 40 சவரன், ரூ.2.45 லட்சம் திருட்டு

*மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

கலசப்பாக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரிய கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப் பையன் என்பவரது மனைவி காசி அம்மாள்(73), சத்துணவு சமையலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஏழுமலை என்ற மகனும், செல்வி என்ற மகளும் உள்ளனர். ஏழுமலை கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார். மகள் செல்வி கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம் பாளையம் ஊராட்சி சாலமேடு பகுதியில் குடும்பத்துடன் உள்ளார்.

இந்நிலையில் காசிஅம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக கடந்த 22ம் தேதி சாலமேடு கிராமத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று காலை மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் மற்றும் ரூ.2.45 லட்சம் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காசிஅம்மாள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன், கலசப்பாக்கம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் வீட்டை சுற்றி வந்து நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மூதாட்டி வீட்டின் கதவு உடைத்து 40 சவரன் நகை மற்றும் ரூ.2.45 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: