சித்தியுடன் கள்ளக்காதலை கைவிட்ட வாலிபர் கூலிப்படை ஏவி கொலை: 6 பேர் கைது

திருமலை: வேறு பெண்ணை திருமணம் செய்ய சித்தியுடனான கள்ளக்காதலை கைவிட்ட வாலிபர் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் அஸ்லாம்கான்(28). ஆட்டோ டிரைவர். இவரது தாய் இறந்துவிட்டதால், அஸ்லாம்கானின் தந்தை, அன்வாரிபேகம்(41) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் அஸ்லாம்கானுக்கும் அவரது சித்தி அன்வாரிபேகத்துக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன், தான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன். எனவே நமது பழக்கத்தை நிறுத்திக் கொள்வோம் என்று அஸ்லாம்கான் தெரிவித்தாராம். அதற்கு அன்வாரிபேகம், உனக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன். நீ திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றாராம். ஆனால் அஸ்லாம்கான் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அன்வாரிபேகம் கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அஸ்லாம்கான் அதே பகுதியில் இருக்கும் தன்னுடைய மாமா வீட்டில் தங்கிக்கொண்டார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அன்வாரிபேகம், மகாராஷ்டிராவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் முகித்முக்கீர் என்பவரை அணுகி அஸ்லாம்கானை கொலை செய்ய ரூ.6 லட்சம் பேரம் பேசியுள்ளார். முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதற்கு சகோதரர் சேக்முகமதுவையும் உடன்பட வைத்துள்ளார். கடந்த 1ம்தேதி நிர்மல் நகரில் உள்ள மருத்துவமனை எதிரில் அஸ்லாம்கானை கொலை செய்ய கூலிப்படையினர் செய்த முயற்சி தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 15ம்தேதி நிர்மல் நகருக்கு முகித்முக்கீர் தலைமையில் அடியாட்களான அப்ரோஷ், சாய்நாத்பவார், ஷேக்சாகித் ஆகியோர் வந்தனர். அன்வாரிபேகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆட்டோவில் சென்றபோது தடுத்து நிறுத்தி அஸ்லாம்கானை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஸ்லாம்கானை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நிர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மகாராஷ்டிராவை சேர்ந்த கும்பல் கொலை செய்து தப்பியோடியது தெரியவந்தது. அதனடிப்படையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு விரைந்த போலீசார் நாந்தேடு அருகே கூலிப்படையினர் 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அன்வாரிபேகம், அவரது சகோதரர் சேக்முகமது ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: