நீங்கள் குடியிருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தம்; 15 நாட்களில் காலி செய்ய அறநிலையத்துறை நோட்டீஸ்: விஜயகோபாலபுரம் மக்கள் கலெக்டரிடம் மனு

 

பெரம்பலூர்,ஜூலை 28: சட்ட விரோதமாக ஆக்கிரமித்து காலிமனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றும் 15 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறையின் எச்சரிக்கை நோட்டீஸால் விஜய கோபாலபுரம் கிராமத்தில்குடியிருந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து புகார்மனு அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜய கோபாலபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான விஜய கோபாலசாமிகோயில் நிர்வாகம் சார்பாக, விஜய கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் ரெங்கர் பிரபு உள்ளிட்ட 51 பேர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது: விஜயகோபால சுவாமி கோயில் சொத்து விபரத்தில் கண்ட சொத்தானது மேற்படி கோவிலுக்கு பாத்தியப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான சொத்தை தாங்கள் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து காலி மனை அனுபவித்து வருகிறீர்கள். அறிவிப்பில் கண்ட சொத்திற்கும் உங்களுக்கும் எவ்வித உரிமையும் இல்லை.

இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 15 தினங்களில் சொத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி திருக்கோயில் வசம் சுவாதீனத்தை ஒப்படைக்க வேண்டியது. தவறினால் இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விஜயகோபால புரம் கிராம பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்குச் சென்றுஅளித்த புகார் மனுவில், எங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்து சட்டப்படி நாங்கள் தகுதி உடையவர்களாக இருந்தால் எங்கள் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 51 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: