டெல்லி: நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சியினரின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எழுப்பிய கவலைகளைக் கருத்தில் கொண்டு, வினாத்தாள் கசிவு போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலான ஒரு முக்கிய மசோதா இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, மாணவர்களின் உணர்வுகளை மதித்து, நாடாளுமன்றத்தில் விரிவான மற்றும் வெளிப்படையான விவாதத்தை நாம் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சியினரை கேட்டு கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, இந்த பிரச்சினையின் முக்கிய நோக்கத்திலிருந்து கவனம் சிதறடிக்கப்பட கூடாது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையிலும், தேர்வு நடைமுறையை வலுப்படுத்தும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாணவர்களின் நலனுக்கான மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றுவதே எங்கள் முன்னுரிமை. இது மிக முக்கியமான மற்றும் அவசியமான ஒரு மசோதா. எனவே, அவையின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சியையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதா குறித்து விவாதிக்க மறுத்து, அதற்குப் பதிலாக அமளியில் ஈடுபடுகின்றனர். தேர்வு முறையைச் சீரமைக்கவும் எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் ஒரு புரட்சிகரமான மசோதாவாக Public Examinations Amendment Bill, 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் எவருக்கும் கடுமையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட தண்டனையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் விவாதம் நடத்தாவிட்டால், அது தவறான ஒன்றாக இருக்கும். நாடாளுமன்றத்தை தவிர வேறு எங்கே நாம் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி மசோதா மீதான விவாதத்திற்கு ஒத்துழைக்க எதிர்கட்சியினருக்கு, கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
